மணமான நாள் முதலாய்
இது தான் உன் இடமென
மனதிற்குள் புகுத்திவிட
எத்தனையோ பிரயத்தனங்கள்
என்னைச் சுற்றியும்
எனக்குள்ளேயும்
புதிய உறவுகளை
முன்னிலைப்படுத்தும் முயற்சியாக
எப்போதும் முதல் வரிசையில்
எனக்காக நின்றிருந்த
உதிர உறவுகளும் நட்புகளும்
சற்றே பின்னுக்கு நகர
எறும்புகளால் அரிக்கப்பட்ட கோலமாய்
சுயவிலாசம் அற்றுப் போய் நின்றேன்
குறையொன்றும் இல்லை தான்
நிறையென்றும் சொல்ல முடியாதபடி
எதுவோ நழுவிவிடுகிறது
எப்படியோ எங்கோ தென்பட்ட
புள்ளி ஒன்றைப் பற்றினேன்
பிடிபட்ட புள்ளிகளையெல்லாம்
இணைக்கத் தொடங்கி
புதிய கோலமாக உருவெடுத்தது
பூத்துக் குலுங்கும் நேரத்தில்
வேரோடு பிடுங்கி வேறிடத்தில்
நடப்பட்டவள்தான்
செழித்து வளர்ந்து கிளை பரப்பியது
இடப்பட்ட உரத்தினால் என்பதாகவே
அனைவரும் எண்ணிக்கொள்ளட்டும்
வேரோடு ஒட்டிக் கொண்டு வந்த
சில மண் துகள்கள்தான்
என் உயிருக்கு ஆதாரமானவை
என்பது எனக்குள் மட்டுமே
புதைந்த ரகசியமாகவே இருக்கட்டும்.