சாவு வீட்டிற்கென்றே சில
இலக்கணங்கள் இருக்கின்றன.
அவசரம் அவசரமாக
அந்த வீடு முழுக்க
எல்லா இடங்களிலும்
துக்கம் தெளிக்கப்படுகிறது.
வெடித்துக் கதறி அழுவதெல்லாம்
நாகரிகத்தால் கட்டுப்படுத்தப்பட்டு
அடைத்து வைக்கப்பட்ட உணர்வுகளின்
நிசப்த வலி சுமந்து
சடங்குகளின் கைதிகள் ஒரு பக்கம்.
அரவம் கேட்டதும் பறந்து செல்லும்
பறவையாய் தங்களின் மரண பயத்தை
விரட்டும் முயற்சியில்
இதுவரை அறிந்த அத்தனை
மரணங்களைப் பற்றிய
அலசல்கள் ஒரு பக்கம்.
ஆங்காங்கே சிரிப்பைத் துடைத்த முகங்களும்
மூக்கை உறிஞ்சும் சப்தங்களுமாக
சாவு வீட்டுச் சம்பிரதாய அலங்காரங்கள்
செய்யப்பட்டு விட்டன.
ஓடி விளையாடிக் கொண்டிருந்த
குழந்தைகளைக்கூட
அடுத்த வீட்டிற்கு அனுப்பியாகிவிட்டது
துக்கச் சூழலைக் கட்டிக்காக்க..
அதிகப்படியான அழுத்தங்கள்
பதித்த முகங்களுடன்
அமைதியாக வருவதும்
சொல்லாமல் போவதுமாக
ஒரு மெளன வருகைப் பதிவேற்றமும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
பசியாறுவதும் படுத்துறங்குவதும்கூட
பதுங்கிப் பதுங்கிதான் நடக்கின்றன.
மெல்லிய அடிநாதமாக
இழையோடிக் கொண்டிருக்கும்
மரணம் மட்டுமே
அங்கே இயல்பானதாக இருக்கிறது.