காலைச் சுற்றும் செல்லப் பிராணியாய்
தவழும் பருவம் முதல்
கால் கோத்து நடக்கும்
அசைவுகளில் நீண்டும் சுருங்கியும்
திசை மாறியும்
கடிகார முள்ளாய்ச் சுற்றி வந்து
என்னை மையப்புள்ளியாக்கி விளையாடும்
நான் தொலைத்துவிட்ட என்னைப்
பத்திரமாகத் தூக்கிச் சுமந்தபடி
ஏக்கத்துடன் பின்தொடரும்
இருட்டின் உக்கிர வெம்மைக்கு மட்டும்
எனக்குள் சென்று ஒளிந்துகொள்ளும்
அந்தகாரத்தின் கனம் தாளாத
ஓர் யாமத்தில் கண்டுகொண்டேன்
சிதறுண்ட ஆடியின் பிம்பங்களாய்
பல்கிப் பெருகிச் சூழ்ந்து
அந்தரங்க வெளியில்
என்னைப் படர்ந்திருந்தது
அதன் பிரம்மாண்டம்
விடிவெள்ளியின் வெளிச்சத்தில்
சுவாசம் மீட்கும் தவிப்புடன்
வாசல் இறங்கி நடக்கத் தொடங்கினேன்
தெருமுனை கடக்கும்போது
உறுப்பொன்றை இழந்ததைப் போன்ற
ஊனம் உணர்ந்த நிலையில்
திரும்பிப் பார்க்கிறேன்
எதிர்த்திசையில் அதிவேக நடையில்
பயணித்துக் கொண்டிருக்கிறது என் நிழல்.