மருந்துக்கடை வரிசையில்
நீளத்தை அளவிடத்
திரும்பியபோது
பின்னால் மூன்றாவதாக நின்றவரின்
புன்னகை அது
அவ்வப்போது
முகம் காண்கையில்
ஆடியில்
பளிச்சிட்டு மறைகிறது
எனக்கானதுதான்
நான் தவறவிட்டதுதான்
உதடுகளாக உறைந்துபோன
புன்னகை
திருப்பிக் கொடுத்துவிடலாம்
அதே மருந்துக்கடை வாசலுக்கு
ஓடினேன்
அவ்விடம் அப்படியொரு புன்னகை
இருந்ததற்கான தடயமே இல்லை
விசாரிக்கவும் கூச்சம்
புன்னகையைத் தவறவிட்டவனாகக்
காட்டிக்கொள்ளவும் மனதில்லை
நிராதவராக நின்றிருந்த அதை யாரேனும்
திருட்டுத்தனமாகத் தன்னுடையதாக்கி
எடுத்துச் சென்றிருக்கலாம்
தனக்கானது என்று தவறாக நினைத்துப் பதிலளித்துக்
கூட்டிச் சென்றிருக்கலாம்
அல்லது
அந்தரத்தில் அதிகம்
காத்திருந்த களைப்பில் ஒட்டிக்கொள்ள
உதடு தேடி
சல்லடை போட்டுக்கொண்டிருக்கலாம்
அலுத்து
சலித்த
இதோ இந்த நாளில்
இறுகியிருக்கும்
என் முகத்தில்
காரணம் ஏதுமின்றி
என்னையும் அறியாமல்
உதடு மட்டும் விரிந்து
சிரிக்கச் செய்தது
அந்தப் புன்னகையாகத்தான்
இருக்க வேண்டும்
இந்த முறை கூடுதலாய்ச்
சில நிமிடங்கள் வைத்து
உபசரித்துவிடுகிறேன்