‘நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காது’ என்று பயமில்லாப் பறவையாகத் தன்னையும் உருவேற்றிக்கொள்ளும் ஸ்டெல்லா மனிதர்களைக் கண்டால் பயம்கொள்வதில்லை, சொல்லப் போனால் மனிதர்களுக்கு ஏங்குபவளாகத்தான் தெரிகிறாள். தனக்கென விதிக்கப்பட்ட வாழ்வில் எதையும் மாற்றிவிட முடியாத இயலாமை ஒரு கட்டத்தில் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு அந்த வட்டத்திற்குள் தனக்கானதாக என்ன செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும். தன்னை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் மனிதர்களற்ற வாழ்வில், தனக்கான உலகத்தை உருவாக்கிக்கொள்கிறாள். தனக்காகவே விரிந்து காத்திருக்கும் வானம், தன் கஷ்டங்களுக்கு விடுதலை தரத் தயாராக இருக்கும் நட்சத்திரங்கள், கூரையை வானமாக்கக் கொண்ட காகிதப் பறவைகள் சூழ் உலகம். பொது உலகத்தில் இருந்து தான் மட்டும் துண்டிக்கப்பட்டதற்குக் காரணமான மனம் மற்றும் உடற்கூறு வேறுபாட்டை முற்றிலும் உணர்ந்தவளாக ‘ரோஜா’வைப் பார்த்து அழுகிறாள். தனிமைக்குத் துணையாகத் தன்னைப் போலவே பேச முடியாத, எல்லையில்லா வானம் கண்முன் விரிந்திருந்தும் வீட்டுக்கூரையை வானமாகக் காணும் காகிதப்பறவைளை உருவாக்குகிறாள். அவர்கள் வெளியாட்களிடம் பேசவில்லை என்றாலும் ஸ்டெல்லாவுடன் ரகசிய உரையாடல் நிகழ்த்துபவை என்பது அவள் எந்நேரமும் அவைகளைச் சுமந்து திரிவதில் புலப்படுகிறது.
அவளுக்கும் அவள் தங்கைக்குமான செயல் முரணும் அதற்குள் பொதிந்திருக்கும் பாசமும் வெவ்வேறு வாழ்க்கைத்தரத்தில் வாழும் சகோதர உறவின் இயல்பு.
எஸ் ராமகிருஷ்ணன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்களான கவித்துவமான காட்சிகளும் படிமங்களும் இக்கதையிலும் நிறைந்துள்ளன.
‘காகிதத்துக்குள்ளே பறவை எப்படி வந்துச்சி.. அது ஒரு இரகசியம். நட்சத்திரம் தான் இப்படி மேஜிக் பண்ணுது’
‘ஒவ்வொரு பறவை செய்து முடித்தவுடன் அவள் அதை வெளியே எடுத்து வந்து வானத்தைக் காட்டுவாள். ஏன் அப்படிச் செய்கிறாள் என்று சுபாஷ் கேட்டதற்குத் திக்கித் திக்கிப் பேசியபடியே பறவைகள் வானத்தைத் தான் முதலில் பார்க்க வேண்டும் என்றாள்.’
‘இந்தப் பறவைகள் கஷ்டம்னா என்னை வானத்துக்கு அழைச்சிட்டு போயிடும். அதான் ரகசியம்’
வான் வெளியை இலக்காகக் கொண்ட ஸ்டெல்லா என்னும் பறவையின் ரகசியம்.