குறுக்குக் கோடுகளால் பிளவுபட்டு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்கும் சாலையின்மேல் வேகங்களின் பிடியில் உயிரிகள் எனக்கான அனுமதி வேண்டிய சிக்னல் காத்திருப்பில் அச்சிறு பறவையும் அருகில் வந்தது. தெரிந்த பறவைகளின் பெயர்களை எல்லாம் நினைவிற்குக் கொண்டு வந்து குல விசாரம் செய்தலசி ஓய்ந்த நேரம் என் கால்களுக்கு இடையில் அலையத் தொடங்கியிருந்தது தரையைக் கொத்திக்கொண்டும் அவ்வப்போது யாரோ கூப்பிடுவதைப் போன்று பக்கவாட்டில் பார்த்தபடியும் நடந்துகொண்டிருந்தது எல்லை மீற முடிவெடுத்துவிட்டது போலும் திடீரென்று குறுக்கே நடக்கத் தொடங்கியது சிற்றுருவம் பூண்ட சிற்றுயிர் பாவம்! அந்த நொடி அதன் பாதுகாப்பு என் கடமையாகிவிட்டது நடுச் சாலையை எட்டியிருந்த அதனை நோக்கி ஓரடிதான் முன் வைத்திருப்பேன் சிறகுகள் படபடக்கும் அரவம் கேட்டுத் தெளியும் அவகாசம்கூடத் தராமல் மரமேறி வானம் பார்த்தபடி கூவுகிறது பறவைக்குப் பறக்கத் தெரிந்திருக்கும் என்பதை எப்படி மறந்துபோனேன்?
கணையாழி அக்டோபட் 2020