களமும் கதாப்பாத்திரங்களும் கச்சிதமாக உருவாக்கப்பட்டு சிறுகதைக்கான ஒரு மையமுடிச்சு, அதனை மேலும் விரிவாக்கி ஆழ்ந்து முடிவை நோக்கி நகர்கிறது இச்சிறுகதை.
செகாவின் ‘த பெட்’ கதையை நினைவூட்டுகிறது கதைக்களமும் கதைப்பின்னலும்.
//மனைவி மேல் கொண்ட நம்பிக்கை என்பது ஒருவகையில் நம்முடைய மரபு மேல் கொண்ட நம்பிக்கைதான். மனைவி என்பது ஒரு தனிப் பெண்ணல்ல. சாமியார் என்பது போல, பூசாரி என்பது போல ஒரு பதவி அது. அந்தப் பதவிக்குரியவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். அப்படித்தான் இருக்கிறார்களா என்று எப்படித்தெரியும்?//
மனைவி என்கிற பதவியையும் உருவாக்கி, அதன் குணநலன்களையும் கடமைகளையும் கட்டமைத்து, அதையே முற்றிலுமான அடையாளமாக்கி, அந்த வட்டத்திற்குள் நெறிமுறைகள் காத்து வாழ்பவர்களைப் பட்டங்களும் பாடல்களுமாகச் சிறப்பித்துவிட்டு, அதன் அனுகூலத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஓர் ஆணின் கோணத்தில் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. நமச்சிவாயத்தின் மனவோட்டங்களின் வழி, அவரது உணர்வுகள் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளது என்பதாக நகர்கிறது கதை.
லதாவைக் குறித்து ரங்கப்பரும் நமச்சிவாயமும் இரு வேறுவிதமான கருத்துகளைக் கொண்டுள்ளனர். அவற்றில் முற்றிலும் வெளிப்படுவது அவர்களின் பலவீனமே என்று தோன்றுகிறது. அவர்களது உரையாடலின் மையமாக இருக்கும் அந்தப் பெண் உரையாடல்களில் மட்டுமே நிறைந்திருக்கிறாள். அவளது உணர்வுகளும் கருத்துகளும் வெளிப்படுத்தப்படவில்லை. பெண்கள் பலவீனமானவர்கள் என்று முழங்கும் இடங்களில் எல்லாம் ரங்கப்பரின் பலவீனம்தான் மேலோங்கித் தென்படுகிறது. லதாவைக் குறித்த தனது நம்பிக்கையை வலுவாகப் பிடித்துக்கொள்ள முயலும்போதும், பணத்தின் பக்கம் மனம் சாயும் தருணங்களிலும் நமச்சிவாயத்தின் பலவீனமும் வெட்டவெளிச்சமாகின்றன. லதா இறுதியில் ஏன் அந்த ரகசியத்தை நமச்சிவாயத்திடம் சொல்கிறாள்? அத்தனை காலமும் அவள் மனதிற்குள் அடைந்துகிடந்த உணர்வுகள்தான் என்ன? பெண்கள் பலவீனமானவர்களா? குடும்பம், உறவு, பணம் போன்றவைதான் அவர்களின் பலவீனமா? அவை பெண்களின் பலவீனம் மட்டும்தானா? அப்படி அவை பலவீனங்களாகும்பட்சத்தில் சமூகக் கட்டமைப்புகளை மறுஉருவாக்கம் செய்யும் அவசியம் உண்டாகிறதா? கேள்விகள் நீண்டுகொண்டே போய் ‘என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!’ என்ற புதுமைப்பித்தனின் அங்கலாய்ப்பில் வந்து முடிகிறது.
வெற்றி யாருக்கு என்று கதாப்பாத்திரங்களுக்குள் அலசுவதைவிட, பேசுபொருள் கருத்து முரண்களை எழுப்பும் விதமாக இருந்தாலும், சிறுகதைக்கான கச்சிதமான வடிவம், கதாப்பாத்திர வார்ப்பு, உணர்ச்சிகளின் வெளிப்பாடு, அவை எழுப்பும் மையக்கேள்வி என அனைத்திலும் நேர்த்தியைக் கொண்டிருக்கும் இச்சிறுகதை எழுத்தாளரின் வெற்றி என்றே கொள்ளலாம்.