பச்சைப் பசலேன்ற ஓலைகளால் முடிசூட்டப்பெற்ற பனையின் தலை. அசைந்து கொடுக்காத, இரண்டு கைகளாலும் கட்டிப் பிடித்தாலும் கைக்குள் அடங்காத கல் போன்ற அடிமரம். உச்சியில் காக்கைச் சிறகுகள் போல் அடித்துக்கொள்ளும் பனை ஓலைகள். பாம்புகள், பேய்கள் பற்றிய இருட்டுக் கதைகளின் வழி அவற்றின் நிழலான இனம் தெரியாத பயம் எப்போதும் சூழ்ந்திருக்கும் கிராமம். இவ்வாறு பனைகளையும் அவை நிறைந்திருக்கும் கிராமத்தையும் விவரித்துத் துவங்குகிறது நாவல். கதைகள் மூலம் கட்டப்பட்ட மூட்டமான சூழலைப் போல், பழம்பெருமைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் புத்தம் வீடு. அதில் வாழும் மூன்று தலைமுறையினர், குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை. வீட்டிற்கும் அடிச்சுக்கூட்டிற்கும் லிஸியுடன் நடந்து நடந்து, திரையிட்ட ஜன்னலின் வழி அவளது செவி கேட்கும், கண் பார்க்கும் தூரம் வரை மட்டுமே கண்டு, கேட்டு, நாம் ஒரு யுகத்தின் மாற்றத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. குலப்பெருமையையும், குடும்ப மானத்தையும் சுமந்துகொண்டு வீட்டிற்குள் மூச்சு முட்ட அடைந்து கிடக்கும் லிஸிக்கு வந்த உணர்வு உண்மையில் காதல்தானா?
பாவாடைக்கு மேல் ஒற்றைத்தாவணி கட்டிக்கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளி போல் எட்டிப் பார்த்து “ஏன்? ஏன்?” என்று கேட்கும் அவளது கண்கள் என்னுள் உறைந்துவிட்டன, அதுபோன்ற எத்தனையோ கண்களை ஞாபகப்படுத்திக்கொண்டு.