பிறந்த வீட்டில் – அம்முதீபா

தலையில் முல்லைப்பூ சூடிக்கொண்டு
பிறந்த வீட்டைவிட்டு வெளியேறி
பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன

யாருக்கும் சொல்லாமல்
அந்த வீட்டை அண்ணனுக்கு எழுதிக்கொடுத்த பிறகு
கடுத்த முகத்துடன் 
வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ தடவை மட்டும்
அவசரகதியில் போயிருக்கிறேன்

மாற்றுத் துணிகளும் துவட்டும் துண்டும்
அமுக்கி வைத்து 
நிறைந்திருக்கும் வயர்கூடையை
மாடிப்படியில்தான் திணித்து வைப்பேன்

வழக்கம் போல், 
இரவு குளித்துவிட்டு வந்து
கூச்சல் போடும் குழந்தைகளுக்கு
இரவுணவு பரிமாறத் தொடங்கும்
அவசர நேரத்தில் 
கரண்டு போகும்

நான் இதுவரை பார்த்தேயிராத
துர்நாற்றம் பரப்பும்
அந்தச் சிறு வண்டு 
அப்போது
சரியாக என் பின்கழுத்தில்
பறந்து வந்து உட்காரும்.

காலச்சுவடு – ஜூலை 2024

Leave a Reply

%d bloggers like this: