Artwork by Frida Kahlo
இவ்வளவு மூர்க்கமாக அம்மாவை நான் பார்த்ததில்லை. பச்சிளங்குழந்தையைக் கையில் வைத்திருக்கும்போது இவ்வளவு ஆங்காரம் வருமா? அம்மாவின் கைகளில் இருந்த நிவி அழத் தொடங்கினாள். நிவியை வாங்குவதற்கு அம்மாவை நோக்கி முன்னகர்ந்தேன். அம்மா படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டாள். ஏசி ஆன் செய்யும் சத்தம் கேட்டது. நிவியைத் தூங்க வைக்கப் போகிறாள். வர எப்படியும் பதினைந்து நிமிடங்களாவது ஆகும்.
என்ன தவறு செய்தேன்? அம்மா ஏன் அப்படி முறைத்தாள்? யோசித்துப் பார்த்தேன். எதுவும் நினைவில் இல்லை. சிவந்து உருளும் அம்மாவின் கண்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. வலது கண்விழி மட்டும் நகர்ந்து என்னை நோக்கி வந்தது. இதோ இப்போது அந்த ஒற்றைக் கண் என் கண்ணோடு வந்து ஒட்டிக்கொண்டது. என் வலது கண்ணின் முன் தூக்கிட்டுத் தொங்கும் சிவப்பு ரோஜாவைப் போல் அது நிற்கிறது.
போன மாதம் என்று நினைக்கிறேன். பக்கத்துவீட்டு க்ளாராவின் ஒற்றை முடி இப்படித்தான் வந்து ஒட்டிக்கொண்டது. காலையில் லிப்டில் குட்மார்னிங் சொன்னாள். லிப்டைவிட்டு வெளியே வந்ததும் அவள் வேறு திசையில் நான் வேறு திசையில் நடந்தோம். பஸ் ஸ்டாப்புக்கு நடந்துகொண்டிருந்தபோது திடீரென ஒரு முடி கண் முன்னால் தெரிந்தது. என் முடிதான் என்று நினைத்துக் கையால் தள்ளிவிட்டேன். அசையவில்லை. கண்ணைக் கசக்கியும் சிமிட்டியும் பார்த்தேன். என்ன செய்தும் போகவில்லை. கண்ணில் ஏதேனும் பிரச்சினையோ என்ற பயம் வந்துவிட்டது. என் கண்ணுக்குள் தெரியும் அந்த முடியை உற்று கவனித்தேன். ஸ்ட்ரைட்டனிங் செய்து, சிவப்பு நிறம் பூசப்பட்ட முடி. க்ளாராவின் முடி என்று கண்டுபிடிக்கவே கொஞ்சம் நேரமெடுத்தது. அது அசைவின்றி நின்றது. எடையற்ற முடி, ஆனால் ஒற்றையாய் இப்படிக் கண்முன் நிற்கும்போது இரும்புக் கம்பி போல் இருக்கிறது. என்ன செய்வது? எப்படித் துரத்துவது? குளித்தால் சரியாகிவிடலாம். அன்றிரவே தலைக்குக் குளித்தேன். அப்படியும் அது அங்கேயே நிலை குத்தி நின்றது. ரகுவிடம் சொன்னால் பிரமாதமான உளவியல் காரணங்கள் எல்லாம் சொல்வான்.
‘உனக்கும் கலரிங் ஸ்ட்ரைடனிங் ஆசையோ? குழந்தை பிறந்ததும் முடி கொட்டிடுமோன்கிற பயமோ? உன் முடி நீளத்தைக் குறைச்ச இல்ல. அதோட ஆழ்மன விசனமாக இருக்கும். முடி பத்தின கவலை எல்லாம் விட்டுரு. எனக்கு உன் முடி எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?’
எனக்குள் அப்படி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் முடியைப் பற்றிய எந்த எண்ணமுமே இல்லை. முடி மட்டுமல்ல, உடல் தோற்றத்தைக் குறித்த எந்த ஆசையும் இல்லை. சோம்பேறித்தனமாகக்கூட இருக்கலாம். அதற்கான எந்த மெனக்கெடலும் கிடையாது. லிப்டிலிருந்து வெளியே வந்தபோது எனக்கு முன்னால் க்ளாரா போனாள். அவளது முடி என் கண்ணில் தென்பட்டது, வேறொன்றும் இல்லை. தூங்கி எழுந்ததும் போய்விடலாம். ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எழுந்தேன். எதைப் பார்த்தாலும் ஒற்றைச் சிவப்புக் கம்பியின் வழி பார்ப்பது போலிருந்தது. அது முடி என்பதே மறந்துபோய் என் கண் ஒரு கம்பிக்குப் பழகிவிட்டது. யார் கண்ணுக்கும் அது தென்படவில்லை என்பது மட்டுமே ஆறுதல். நிவிக்குக் காய்ச்சல் வந்த ஒரு நாள் அது காணாமல் போனது. அதை மறந்துமிருந்தேன், இந்தக் கண் வந்து தொற்றிக்கொள்ளும்வரை.
முடி போலல்ல இந்தக் கண். வந்த பத்து நிமிடங்களிலேயே பயமுறுத்திக் கொண்டிருந்தது. சிவப்பென்றால் அப்படி ஒரு சிவப்பு. இரத்தச் சிவப்பு நிறம். இரத்தமேதான் அங்கு கொட்டிக்கிடக்கிறது. அதில் ஒரு கரு உருண்டை மிதக்கிறது. இரண்டும் திரவம்தான். ஆனால் ஒன்றில் ஒன்று கலக்காமல் தனித்திருக்கின்றன. உற்றுப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது, மனிதக் கருதான். உருவான மூன்று மாதங்களுக்குள் இருக்கலாம். டாக்டர் லின் ஸ்கேன் செய்தபோது காட்டிய உருண்டைகள் எல்லாம் நினைவில் வந்து போயின. எப்படி இங்கே தனியாக இரத்தத்தில் மிதக்கிறது? மொத்தக் கோளமும் எப்படிக் கண்ணானது? அம்மாவின் ஒற்றைச் சிவப்புக் கண்!
ரகுவிடம் சொன்னால், ‘வேறொன்னுமில்லடா. இந்த பதிமூனு மாசமா கரு, குழந்தை, யூட்ரஸ், டெலிவரினு வேற நினைப்பே இல்லாம இருந்தல்ல? ஒரு உயிரை இன்னொரு உயிருக்குள்ள சுமப்பதுனா சும்மாவா? அதான் எல்லாமே உனக்குக் கருவாத் தெரியுது போல. இன்னும் சொல்லப் போனா இதெல்லாம் உன் மனப்பிரமை. இதை அப்படியே அதன் போக்குல விட்டு நீ இயல்பாக இரு. தன்னால சரியாகிரும்.’
கை பிடித்து அழுத்திக்கொண்டே அக்கறையுடன் சொல்வான். வேண்டாத கோபத்தை ஏற்றுக்கொள்வதுகூட எளிது. ஆனால் வேண்டாத அக்கறையையும் அன்பையும் என்ன செய்ய முடியும்?
அம்மா வந்துவிட்டாள். நேராகக் கிச்சனுக்குப் போய் ஒரு கிண்ணத்தில் ஊறப்போட்டிருந்த பாதாம் பருப்பை எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள். நிவி தூங்கும் அறைக்குள் நுழைந்தேன். ஏசி போட்டிருப்பது போலவே இல்லை, மெல்லிய குளிர் காற்று. சற்றே திறக்கப்பட்டிருந்த ஜன்னல் திரை வழி நுழையும் அளவான சிறிய வெளிச்சம் அறையை ரம்மியமாக்கியது. தூங்குவதற்கேற்ற சூழலை அம்மா அழகாகக் கொண்டு வந்துவிடுகிறாள். என்னால் நிவியைப் பால் கொடுத்து மட்டும்தான் தூங்க வைக்க முடிகிறது. நிவி பக்கத்தில் படுத்துக்கொண்டேன்.
நிச்சயம் முடியைப் போல் இந்தக் கண்ணை விட்டுவிடக் கூடாது. இந்த முறை கூடுதல் கவனத்துடன் ஆராய வேண்டும். எந்தெந்த நேரங்களில் வருகிறது. என்ன செய்கிறது? சாப்பிடும்போதோ தூங்கும்போதோ முடியைப் பார்த்த நினைவில்லை. மற்ற நேரங்களில் எல்லாம் கூடவேதான் இருந்தது. ஆனால் பெரிதாகத் தொல்லை எதுவுமில்லை, ஒரு உறுத்தலைத் தவிர. இந்தக் கண்ணின் சிவப்போ திகிலாக இருக்கிறது. என் கண் முன்னால் நிற்கும் அது என்னையும் பார்க்கிறது. நான் பார்க்கும் அனைத்தையும் பார்க்கிறது. முன்னும் பின்னும் பார்க்கும் கண். அதுவே என் கண்ணாகிவிட்டால்? நானும் முன்பின் பார்க்க முடியுமோ? என் வலது கண்ணுக்குள்ளேயே போய்விடுமோ? ஒரு கண் மட்டும் சிவப்பாக நிலைகுத்தி நிற்கும் என் உருவத்தைக் கற்பனை செய்து பார்த்தேன். காளி ரூபம்போல் ஒற்றைக் கண், கலக்கத்துடன் மற்றொரு கண். எவ்வித உணர்ச்சியும் காட்டாத மற்ற முகபாகங்கள். உக்கிரமும் கலக்கமும் இரண்டு கண்களானால் என்னவாகும்? ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் பார்க்க முடியுமோ? சுட்டெரிக்கும் கண் கலக்கக் கண்ணை ஒடுக்கிவிடுமோ. பார்க்கும் எல்லாமே சிவப்பாக மாறிவிடுமோ, சிவப்புத் திரையிட்டது போல. கண்ணை மூடினாலும் இருளில் ஒற்றைக்கண் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் கொஞ்சம் உக்கிரம் குறைவதாகத் தோன்றியது. கண்ணைத் திறந்தால் காத்திருந்தது போல வந்து தொற்றிக்கொண்டு வெறித்தது. பயம் குறைந்தால்தானே உற்றுக் கவனித்து ஆராய முடியும்? நிவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இதெல்லாம் செய்ய வேண்டாம். இப்போது கண் மூடியிருப்பது நல்லது.
அந்தக் கண்ணை மீண்டும் கவனித்தபோது நான் குளித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் ப்ளீடிங் நின்றபாடில்லை. உடலில் வேறெந்த வலியும் இல்லை. குழந்தை பிறந்த சுவடே இல்லை. இந்த ப்ளீடிங் மட்டும் எரிச்சலாக இருந்தது. ஒரு குழந்தை போதும் என்று ரகுவும் நானும் எப்போதோ முடிவு செய்துவிட்டோம். கருப்பையை நீக்கிவிடலாமா? ரகுவிடம் சொன்னால் ‘கருப்பை உன்னோட இருக்கும் உறுப்பு. அதை நீக்குவதால் உடலின் சமநிலை பாதித்து, வேறெந்த மாதிரி உடல் உபாதைகள் வரும்னு தெரியாது. உனக்கு இப்போது பிரச்சினை மனசுதான். டெலிவரி முடிந்த கொஞ்ச நாளுக்கு இப்படியெல்லாம்தான் மனம் படுத்தும். ரொம்ப அலட்டிக்காத. நான் இருக்கேன்.’ என்று கையைப் பிடித்து முத்தமிடுபவனிடம் ‘என் ப்ளீடிங்கிற்கும் நீ இருப்பதற்கும் என்ன சம்பந்தம் ரகு?’ என்று கேட்டுவிட முடியுமா? என் நாப்கினைக் குப்பையில் போடுவது, இரத்தக் கறை படிந்த என் துணிகளைக் கழுவுவது என எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறான். மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களையும் அவன் அருகாமையால் மட்டுமே எளிதில் கடந்துவர முடிந்தது. வெந்நீரை ஊற்றியதும் மார்பில் இருந்து பால் கசிந்தது. இந்தப் பழுப்பு நிறத்திரவம்தான் நிவியின் முழு உணவு. எப்போதும் உணவைச் சுமந்துகொண்டிருப்பதை நினைத்துச் சிரிப்பு வந்தது. கண் குளியலறையின் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தது. மூன்று கண்கள் இருக்கும் உணர்வு. ஆனால் அது பார்ப்பவற்றை அதன் கோணத்தில் என்னால் பார்க்க முடிவதில்லை. 360 கோணத்தில் சுற்றும் மூன்றாவது கண்ணாகிவிட்டால் நன்றாக இருக்கும். வேண்டாம், ரகு சொல்வது போல் சமநிலை பாதிக்கப்படும். சீர்மை குலைந்துவிடும்.
நிவியும் குளித்த களைப்பில் இருந்தாள். என் விரல்களை இறுக்கப் பற்றியபடி பால் குடித்துக் கொண்டிருந்தாள். சிவப்புக் கண் பார்த்துக் கொண்டிருந்தது. எதைப் பார்க்கிறது என்று என்னால் கணிக்க முடியவில்லை. உண்மையில் அதற்குப் பார்வை உண்டா? உடலில் பல நரம்புகள் பின்னிப் பிணைந்துதானே கண்ணுக்குப் பார்வை கிடைக்கிறது. தனிக்கோளமாக நிற்கும் இந்தக் கண்ணுக்குப் பார்க்கும் திறன் இருக்குமா? அது தனி உயிர்தானா? அப்படித்தான் தோன்றுகிறது. ததும்பும் அந்தச் சிவப்பில் உயிர் இருக்கிறது. உயிர் என்றால் என்ன? உயிர்ப்பு என்றால் துடிப்புதானா? அசைவும் அலைவும்தான் உயிரா? சிமிட்டாமல் இருக்கும் கண்ணை எப்படி உயிருள்ளது என்று சொல்ல முடியும்? ஆனாலும் உயிர்ப்பு தெரிகிறதே. திறந்தே இருக்கும் விழிகள். உற்றுப் பார்த்தேன். இமை இல்லை. வெறும் சிவப்புக் கோளம், டாக்டர் லின் விவரித்த ப்ளாஸ்டோசிஸ்ட். எனக்குப் பிரசவம் பார்த்தவள் அவள். ஒவ்வொரு வாரத்திற்கான கரு வளர்ச்சியையும் படம் காட்டி விவரித்துச் சொல்வாள். வலது கையில் பேனாவை வைத்துக்கொண்டு அதை நாலா புறமும் காற்றில் ஆட்டியபடிபேசுவாள். குழந்தை உருவாகியிருக்கிறது என்று உறுதி செய்த நாள் முதல் அடிக்கடி சந்தித்ததால் நட்பாகிவிட்டோம். லின் நட்பானது போல் கருப்பையும் மனதுடன் ஒன்றிவிட்டதோ. ஒரு வேளை ரகு சொல்வதுபோல்தானோ. அப்படியென்றால் முடி?
எல்லாவற்றிற்கும் காரணம் கண்டுபிடிப்பது எளிது. ஆனால் என்ன பயன்? இப்போது என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சரி. பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பார்த்தேன். மடித்த என் கைக்குள் இருக்கும் நிவியின் தலையும் என் இடது மார்பும் என் முகமும் மங்கலாகத் தெரிந்தன. முகத்தில் அப்படி ஒரு கண் இருந்த தடமே இல்லை. என் கண்கள் என்னைக் கேலி செய்வது போல் சிரிக்கின்றன. கண்ணாடியில் தெரியாத எதுவும் நிஜமில்லை. அப்படியென்றால் இது கற்பனைதானா? அல்லது கண்ணாடி பார்க்க விரும்பாத கண்ணா? நிவியின் உதடுகளில் சின்ன அசைவு மட்டுமே. பால் குடிக்கிறாளா, தூங்குகிறாளா என்றே தெரியவில்லை.
கண்ணாடியில் இருந்து முகத்தைத் திருப்பினேன். கண் காட்சியளித்தது. சிவப்புக் கோளத்துக்குள் இளஞ்சிவப்பு நிறத்தில், சிலந்தி வலையைப் போல் மெல்லிய நரம்புகள். நரம்புகள் இணையும் புள்ளிகள் அணுவைப் போன்ற வடிவில் இருந்தன. நடுவில் ஒரு கரு. அந்தக் கருவின் உள்ளே கடற்குதிரையின் உருவத்தில் என்னவோ இருக்கிறது. அதன் மேல் தாவி ஏறுகிறேன். அது திரவத்தில் வழுக்கிக்கொண்டு போகிறது. திரவத்தைத் தொடப் பார்க்கிறேன், கைகளில் படவில்லை. வழுக்கிக்கொண்டே போகிறது. கைகளை இருபுறமும் படகுத் துடுப்புபோல் வீசி அலசுகிறேன். துடுப்பின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. நிவியின் சிணுங்கலில், கண் விழித்தேன். தூங்கிவிட்டேன் போலும், கைகளைத் தளர்த்தியதில் நிவி விழித்திருந்தாள்.
சிவப்புக் கண்ணைக் கண்டுகொள்ளாதது போல், கணினியில் அலுவலகம் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருந்தேன், விடுமுறை முடியப் போகிறதே. தன்னிருப்பை அசாத்தியமாக உறுதி செய்துகொண்டிருந்தது அந்தக் கண், ஒவ்வொரு எழுத்தின்மேலும் பதிந்து. விடாப்பிடியாக வேலையை முடித்தேன். செல்போனில் எடுத்த நிவியின் புகைப்படங்களை ஹார்ட் டிஸ்கில் சேமிக்கும்போது, சில பழைய புகைப்படங்கள் கண்ணில் பட்டன. நான்கு வருடங்கள் முன்பு நானும் ரகுவும் ஒரு மரத்தடியில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு உட்கார்ந்து சூர்ய அஸ்தமனத்தை ரசித்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று. புகைப்படத்தில் எங்கள் முகங்களுக்குப் பின்னால் தூரத்தில் சூரியன் சிவந்து ஜொலித்தது. ஒற்றைக் கண் உற்சாகமாகிவிட்டதோ. என் கண்களை நகர்த்தி சிவப்புக் கண்ணைச் சரியாக சூரியனுடன் இணைக்க முற்பட்டேன். முடியவில்லை. வலிந்து எதையும் செய்ய விடுவதாக இல்லை போலும் அந்தக் கண். சரி, அது இஷ்டப்படியே இருக்கட்டும். அதனிடம் இருந்து எப்படி விடுபடுவது என்று எனக்குத் தெரியும். அடுத்து எதையாவது கண்ணில் தொற்றிக்கொண்டால்தான் இதில் இருந்து விடுபட முடியும். இந்த முறை நானே தேர்ந்தெடுத்தால் என்ன? இந்தச் சூரியன்? வேண்டாம், கண்ணின் தகிப்பே தாங்க முடியவில்லை.
வீட்டை ஒரு முறை நோட்டம் விட்டேன். கண்ணை உறுத்தாத எதையாவது வைத்துக்கொள்ளலாம். ஏதேனும் பூ? பால்கனித் தொட்டியில் பூத்து நின்ற மல்லி அருகில் போய் அதை உற்றுப்பார்த்தேன். அசைவில்லை. ஒரு வேளை சிவப்புதான் சரிவருமோ. நெடிய வளர்ந்திருக்கும் செம்பருத்திச் செடியிடம் போனேன். பூக்கள் கண்ணுக்குத் தென்படவில்லை. கைகளால் இலைகளைத் துழாவி அசைத்துப் பார்த்தபோது ஒரு சிறிய பூ கண்ணில் பட்டது. சிவப்புக் கண்ணும் சேர்ந்து தேடியதோ! வலது கையில் அந்தப் பூவைப் பிடித்துக்கொண்டேன். ஆழமான அதன் நடுப்பகுதியை உற்று நோக்கினேன். கண் சரியாக அந்தச் சரிவிற்குள் போய் நிலை குத்தி நின்றது. வேறொன்றும் நடப்பது போலில்லை. பக்கத்துவீட்டுப் பூனை அவர்களது வீட்டு வாசலில் நின்றபடி என்னையே வெறித்துப் பார்க்கிறது. உடல் முழுக்கக் கருத்திருக்கும் அந்தப் பூனையின் கண்கள்தான் முதலில் என் கண்ணில் பட்டன. மஞ்சள் நிறத்திற்குள் கருப்புக் கோளம், கொஞ்சம்கூட அசைவேயில்லை. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் தொற்றிக்கொள்ளுமோ என்ற பயத்தில் வீட்டிற்குள் வந்துவிட்டேன்.
கிளினிக் அறைக்குள் நுழைந்ததும் வாசலுக்கு வந்து என்னைக் கட்டிக்கொண்டாள் லின். அவள் எப்போதுமே இப்படித்தான். அவளது உதடுகள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும், அவளது கை, என் தோளையோ, கைகளையோ, தலையையோ தொட்டு அவற்றுடன் தனி உரையாடல் நடத்திக் கொண்டிருக்கும்.
‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டாள். என் கைகளைப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு அவளது நாற்காலிக்குப் போனாள். வழக்கமாக அவள் உடுத்தும் முழங்கால் நீள ஸ்கர்ட். ப்ரில் இல்லாத பார்மல் ஸ்கர்ட். இடுப்புடன் ஒட்டிக்கொண்டு இருக்கும். அவள் நடக்கும்போதும் நாற்காலியில் சுற்றும்போதும் முழங்கால் பகுதியில் மட்டும் அசைவு தெரியும். என் கண்கள் அந்த அசைவையே கவனித்தன.
‘ரகு வரவில்லையா? உன் மகள் எப்படியிருக்கிறாள்? உன் உடல்நிலை எப்படி இருக்கிறது?’
அவள் நாற்காலியில் அசைந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். மூன்றாவது கேள்விக்கு மட்டும்தான் பதில் சொன்னேன். என் பதில்களைக் குறித்துக்கொண்டாள். அந்த அறை எனக்கு ஒரு வருடப் பழக்கம். ஒருபக்கச் சுவரில் புகைப்படங்கள் ஒட்டியிருக்கும். ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் டாக்டரும் தாயும் பிறந்த குழந்தையும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். நானும் நிவியும் லின்னும் எடுத்த புகைப்படம் அங்கிருக்கிறதா என்று தேடினேன்.
‘பரிசோதித்துவிடலாமா?’ என்று கேட்டு, பின்னால் நின்றுகொண்டு விவரங்களை கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த நர்சைப் பார்த்தாள் லின்.
நான் எழுந்துகொண்டேன். அந்த அறையிலேயே சுற்றுத்திரை போட்டு மூடினால் மற்றொரு தற்காலிக அறை உருவாகிவிடும். அதற்குள் நுழைந்தேன். அங்கு மங்கிய இருள். கண் நன்கு விழித்துக்கொண்டது.
‘ஸ்கேன் மட்டுமா?’ நர்சிடம் கேட்டேன்.
‘உள் பரிசோதனையும் சேர்த்துதான்’ என்றாள்.
உள்ளாடையையும் கழற்றிவிட்டு அந்தப் படுக்கையில் ஏறிப் படுத்தேன். நர்ஸ் படுக்கையை இடுப்புக்குக் கீழே மடக்கிவிட்டாள். இரண்டு பக்கமும் கால்களை விரித்து வைக்க ஏதுவாக ஸ்டாண்டுகள். அதில் என் கால்களை வைக்க உதவினாள். வெள்ளை நிறப் போர்வையை அவள் என்மேல் போர்த்தவும் லின் வரவும் சரியாக இருந்தது. விரித்து வைத்திருக்கும் என் இரண்டு கால்களுக்கு நடுவில் நின்றாள் லின். கைகளால் முதலில் வயிற்றுப் பகுதியைத் தொட்டு அழுத்திப் பார்த்தாள்.
ஒவ்வொரு அழுத்தத்திற்கும் ‘வலி இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
‘குட், எல்லாம் நார்மலாகிவிட்டது.’ என்றாள்.
என்னவோ நான் செய்த சாதனை என்பதுபோல். நான் உள்ளுக்குள் சிரித்தேன். கண்ணும் சிரித்தது போலிருந்தது.
‘அப்படியென்றால் அவ்வப்போது பிளீடிங் மட்டும் ஏன்?’
‘மற்றபடி எல்லாம் நார்மல் என்பதால் பயப்பட ஒன்றுமில்லை. இன்னும் ஒரு மாதம் பார்க்கலாம். நின்றுவிடும்.’
லின்னின் குட்டிக் கண்கள் அழகாகச் சிரித்தன. இந்தக் கண்ணுக்கு மாறிவிடலாமா? சிவப்புக் கண் அதை அனுமதித்தது போல் தெரியவில்லை. லின் மார்பு, வயிறு முடித்துவிட்டு இப்போது யோனிக்குப் போகிறாள். அங்கிருந்த ஸ்டாண்ட் ஒன்றில் பொருத்தியிருக்கும் லைட்டை யோனிக்கு மட்டும் வெளிச்சம் தருவது போல் திருப்பினாள் நர்ஸ்.
‘ஸ்டிச் எல்லாம் உதிர்ந்துவிட்டது’ என்றாள் லின். போர்வையைச் சற்று நகர்த்திவிட்டு பல முறை சாரி சொல்லிக்கொண்டே அதன் வழி கருப்பையைத் தொட்டுப் பார்த்தாள்.
‘வலிக்கிறதா?’ என்றாள்.
இல்லை என்பது போல் தலையாட்டினேன். கண் லின்னின் விரல்களையே பார்ப்பது போலிருந்தது. இந்தக் கண்ணைப் பற்றி லின்னிடம் சொன்னால் என்ன? உளவியல் ஆலோசனைக்குப் போகச் சொல்லி அறிவுறுத்துவாளோ?
‘முடிந்தது. கருப்பையும் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது. நீ மீண்டும் பழைய ஆளாகிவிட்டாய்.’ என்றாள் சிரித்தபடி. சிவப்புக் கண் அவளையே பார்த்தது. சட்டென ஒரு பொறி தட்டியது.
‘நான் பார்க்கலாமா லின்?’
‘என்ன?’ என்று குழப்பத்துடன் என் முகத்தைப் பார்த்தாள்.
எல்லாம் முடிந்தது என்று சொன்னதும் வழக்கமாக நான் எழுந்து இந்நேரம் உடை உடுத்தத் தொடங்கியிருப்பேன். படுத்திருப்பதை வைத்து ஊகித்தாளோ என்னவோ, ‘ஒய் நாட்?’ என்றாள்.
நர்ஸும் சிரித்தபடி மேசையருகே இருந்த கைப்பையை எடுக்கப் போனாள்.
‘பெரியதை எடுத்து வா.’ என்றாள் லின்.
ஸ்க்ரீனைத் திறந்து அடுத்த அறைக்குப் போனாள் நர்ஸ். கண்ணின் இரத்தம் அசைந்ததோ! லின் என் படுக்கையின் தலைப்பகுதியை மேலே ஏற்றினாள். தலைப்பக்கம் நின்றவாறே, ‘எதற்கும் பெயின் கில்லர் மட்டும் தருகிறேன்.’ என்று சொல்லிவிட்டு எழுதிக்கொண்டிருந்தாள்.
‘பால் கொடுக்கிறாயா? அதில் எதுவும் பிரச்சினையில்லையே?’
நான் பதில் எதுவும் சொல்லவில்லை.
ஒற்றைக் கண் லின்னையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. லின் அந்தக் கண்ணைப் பார்த்திருந்தால் கண் அவளிடம் போயிருக்குமோ? பாதி இருட்டான அந்த அறையில் அந்தக் கண் சுதந்திரமாக உணர்வது போலிருக்கிறது. என்னைப் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரிப்பது போலவும். உன்னைத் துரத்துகிறேன் பார் என்றேன்.
ஒரு கண்ணாடியை இரண்டு கைகளால் தூக்கிக்கொண்டு வருகிறாள் நர்ஸ். தலையில் இருந்து தோளளவு உயரம் கொண்டது. நகர்ந்து வரும் கண்ணாடி திரையிடுக்கில் சின்னதாகத் தெரிந்தது. கண்ணாடிச் சில்லுபோல் கண்ணாடியின் சிறு துண்டுதான் ஒரு நேரத்தில் என் பார்வைக்குக் கிட்டியது. அடுத்த அசைவில் வேறொரு துண்டு. குழந்தையின் கை, லின்னின்சிரித்த உதடுகள், கரடி பொம்மையின் தொப்பை, சூரியகாந்திப்பூவின் காம்பு, ஜன்னலின் ஓரம், அதில் தெரியும் ஒரு துண்டு வானம், கொன்றை மரத்தின் உச்சி. நர்ஸ் கால்களுக்கு நடுவே கண்ணாடியை வைத்தாள். போர்வையை நகர்த்திவிட்டுச் சரியாக இருக்கிறதா என்பதுபோல் என்னைப் பார்த்தாள். என் கண்ணில் தொற்றியிருக்கும் சிவப்புக் கண்ணின் ரத்தம் கொதிப்பது போலிருந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். நர்ஸ் கண்ணாடிக்குப் பின்புறமிருந்து இடது பக்கம் தலையை மட்டும் நீட்டி என்னைப் பார்த்தாள். லின் சற்றே குனிந்து என் தோளைத் தொட்டபடி கண்ணாடியில் பார்த்தாள். நான் கண்ணைத் திறந்தேன். இருவரின் முகமும் கண்ணாடியில் தெரிகிறது. நடுவில் அந்தச் சிவப்புக் கண்.
***
தமிழ்வெளி – ஏப்ரல் 2024