அகலாது அணையாது

ஓவியம்: ரவி பேலட்
ஓவியம்: ரவி பேலட்
ஓவியம்: ரவி பேலட்

இதுவரை அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததே இல்லை. இந்த விஷயம் அவளுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும் வரை பிரச்சனையாக இல்லை. இப்போது அம்மா எப்படியோ கண்டுகொண்டதுதான் பிரச்சனையே. அம்மாவின் கண்களுக்கு எதுவும் தப்புவதில்லை. போன வாரம் பின்கழுத்தில் ஒரு சிறு காயம். கையில் போட்டிருந்த மோதிரம் அல்லது அவளது நகமாகக்கூட இருக்கலாம். தேங்காய் எண்ணெய் தடவச் சொல்லி அம்மா நச்சரித்தபடி இருந்தாள். சாதனா மறந்துவிட்டால் அம்மாவே வந்து தடவியும் விட்டாள். மூன்று நாட்கள் இரண்டு வேளையென அந்தக் காயம் சரியாகும் வரை எண்ணெய் சிகிச்சை. ப்ரா விஷயத்தைச் சும்மா விடுவாளா!

வெளியே தெரியாத விஷயம்தானே, எப்படி இருந்தால் என்ன என்று பெரிதாக அதற்கு அலட்டிக்கொண்டதில்லை சாதனா. ஆனால் ப்ரா வாங்கச் செல்வதுதான் பெரும் அவஸ்தை. அங்கு பலரும் ப்ரா வகைகளைக் கைகளால் தொட்டுப் பார்ப்பதும், வைத்துப் பார்ப்பதும், போட்டுப் பார்ப்பதுமாக மிகவும் தீவிரமான பாவனையில் சலித்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். அவளுக்குள் அது குற்றவுணர்வைக் கிளறிவிடும். செய்ய வேண்டிய முக்கியமான ஏதோ ஒன்றில் அலட்சியமாக இருப்பது போன்றதோர் உணர்வு. கூடவே ஆசையும் தலை தூக்கத் தொடங்கும், இந்த முறை அமைந்துவிட்டால்?

அந்த ஆசையை நெட்டித் தள்ளிவிட்டு, அவள் நேராகப் போய் ப்ரா அளவைச் சொல்லிக் கேட்டாலும், ‘அப்படியா என்ன’ என்பது போல் சேல்ஸ் பெண் பார்க்கும் பார்வை இருக்கிறதே. ‘எதற்கும் அளந்து பார்த்துவிடலாமா?’ கேட்பதென்னவோ கேள்விதான். ஆனால் பதில் சொல்வதற்குமுன் இன்ச் டேப் மார்பைச் சுற்றி வளைத்திருக்கும்.

‘இது சரியான அளவாகத் தோன்றவில்லை, புதிதாக ஒரு மாடல் வந்திருக்கிறது. இதே அளவில் ஆனால் கப் அளவு மட்டும் மாற்றித் தருகிறேன், போட்டுப் பாருங்கள்’ இல்லை சரியாகத்தான் இருப்பதுபோல் இருக்கிறது என்று தயக்கத்துடன் சொன்னால், வகுப்பெடுக்க ஆரம்பிப்பாள். ‘மார்பை மறைக்கத்தான் ப்ரா என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் அது உங்களுக்குத் தரும் சப்போர்ட் மிகவும் முக்கியம். அதனால் சுற்றளவு மட்டும் அல்ல, கப் சைஸ், உங்கள் தேவையைப் பொறுத்து, ஸ்டிரிங் மாடல், பேடெட் மாடல் எனப் பல வகையான மாடல்கள் உள்ளன….’ தவறு செய்து மாட்டிக்கொண்ட பள்ளிக்குழந்தையாய் விழித்தபடி நிற்க வேண்டியிருக்கும்.

புது ப்ரா வகைகளைப் பார்த்ததும், மீண்டும் ஆசை லேசாக வந்து எட்டிப் பார்க்கும். எப்போதும் ஒரே மாதிரி போடுகிறோமே, மாற்றிப் பார்ப்போமே என்று தோன்றும். வாங்கிவிடுவாள். பலவகை மாடல்களைப் போட்டுப் பார்த்து, வெகுதிருப்தியாக வாங்கிய ப்ரா வீட்டிற்கு வந்த மறுநாளே, பழைய ப்ராவைவிட மோசமாகத்தான் தோன்றும். தோள்பட்டையில் பிடிப்பாகவோ, அடிமார்பில் குத்துவது போலவோ இருக்கும். கழற்றி அலமாரியின் அடியில் போட்டுவிட்டுப் பழையதைத் தேடத் தொடங்குவாள். அடுத்து புதிதாக ஒன்று வரும்வரை அது அங்கேயேதான் கிடக்கும், அவ்வப்போது அவசரத் தேவைக்கு எடுப்பதைத் தவிர்த்து. புதியது வந்துதான் அதன் மதிப்பை உணர்த்தும். பழகிப் போன பழைய ப்ரா என்ற அந்தஸ்தையும் பெற்று முன்னிலையில் வந்துவிடும்.

கல்யாணம் நிச்சயமாகிய இந்த இரண்டு மாதங்களுக்குள் எல்லாவற்றிலும் அம்மாவின் தலையீடு. இனி எதுவுமே தனது அந்தரங்கமாக இருக்கப் போவதில்லையா, ப்ரா உட்பட? சாதனாவுக்கு உள்ளே மெதுவாக ஒரு அச்சம் பரவத் தொடங்கியிருந்தது. திடீரென்று அவளது உடல் குடும்பச் சொத்தாகிவிட்டதைப் போல் தோன்றியது. கல்யாணம் முடியும் வரை அதைப் பாதுகாத்து ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானதைப் போல் அம்மா பரபரக்கிறாள். ப்ரா வாங்கும் வைபோகமும் அம்மாவின் முடிவுதான், சித்தியுடன் போக வேண்டும்.

முன்பெல்லாம் அம்மாதான் வாங்கி வருவாள். சரியாக இருக்கிறதா பார் என்பாள். சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வாள். சரியாகத்தான் இருக்கும். ஒரு கட்டத்தில் தோழிகளுடன் போயிருக்கிறாள். அது மேலும் சங்கடம். பின்னர் எப்போதும் தனியாகப் போய்த்தான் வாங்குவாள். கூச்சமா தெரியவில்லை. சாதனாவுக்கு ஷாப்பிங் என்பதிலேயே அவ்வளவாக விருப்பமில்லை. முக்கியமாக, ப்ரா கடையில் அதிக நேரம் நிற்கவே பிடிப்பதில்லை. என்னவோ ஒரு பதட்டம்! உடன் ஒட்டிக்கொண்டு அவஸ்தை கொடுக்கும் பொருள் என்ற எரிச்சலோ என்னவோ. ஆனால் அவள் ப்ரா போட ஆசைப்பட்ட காலமும் உண்டு.

அவளது வகுப்பில் முதலில் ப்ரா போட்டது மீராதான், முதலில் பெரியவளானதும் அவள்தான். யூனிபார்மின் வெளிறிய மஞ்சள் நிறத்தை மீறி மீராவின் வெள்ளை ப்ரா பளீரென வெளியே தெரியும். மற்ற பெண்கள் எல்லாம் ஏதேதோ கேலியாகச் சொல்லிச் சிரிப்பார்கள். சாதனாவுக்கு மட்டும் தானும் எப்போது ப்ரா போடப் போகிறோம் என்று ஆசையாக இருக்கும்.

சடங்கு நாளன்று மீராவை ஒரு ஸ்டூலில் உட்கார வைத்து மஞ்சள் தண்ணீர் ஊற்றினார்கள். பாவாடையை மார்பு வரை ஏற்றிக் கட்டியிருந்தாள். மஞ்சள் நிறப்பாவாடை. அதன் கீழ் ஓரங்களில் இருந்த லேஸ் அவளது முழங்காலைத் தொட்டிருந்தது. தண்ணீர் பட்டதும் பாவாடை ஒட்டிக்கொள்ள, அவளது மார்பகங்கள் சிறுகூம்பாகத் தெரிந்தன. விரிந்த சிறு மலரைப் போன்ற வடிவத்தில் மஞ்சள்நீரில் நனைந்தன. மஞ்சள் நீரும் மலர்களுமாய் அபிஷேகம் செய்யப்படுவது போலிருந்தது. தாங்கள் சீராட்டப்படுவதைக் கொண்டாடும் இரு இளவரசிகளாய் அவை பளபளத்தன. சாதனா கண்ணெடுக்காமல் பார்த்து ரசித்தாள். மார்பின் வடிவம் அவளை மிகவும் கவர்ந்தது. உடலில் திடுமெனப் பூத்திருக்கும் ஒரு பூ போல. அதனால்தான் பூப்பெய்துதல் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் மனதுக்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.

விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றுவதாகச் சொல்லிவிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுத் தன் அறைக்குள் வந்தாள். சட்டையைக் கழற்றி, குனிந்து பார்த்தாள். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கண்ணாடி கிடைத்தால்? அவளது அறையில் கண்ணாடி இல்லை. குளியலறைக்குச் சென்று உடைகளைக் களைந்துவிட்டு வாஷ்பேசின் அருகே இருக்கும் சிறு கண்ணாடியில் பார்த்தாள். தோள்பட்டை வரைதான் தெரிந்தது. நன்கு தள்ளி நின்று பார்த்தபோதும் சரியாகத் தெரியவில்லை. பக்கவாட்டில் திரும்பி நின்று உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது. சிறிய மேடு. தன்னுடலில் புதிதாய் முளைக்கும் பூ, மொட்டுவிட்டிருக்கும் பூ. தொட்டுத் தடவும்வேளையில், வெளியே அம்மா கூப்பிடும் சப்தம் கேட்டது. அவசரமாக உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

ஒரு முறை அம்மாவுக்குத் தெரியாமல் அம்மாவின் ப்ராவைப் போட்டுப் பார்க்க முயன்றாள். எப்படிப் போடுவெதென்றே தெரியவில்லை. முன்பக்கம் எது என்பது தவிர எதுவும் புரியவில்லை. கைகளில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.

வயதுக்கு வருவதற்கு முன்பே சாதனாவைப் பள்ளியில் ப்ரா போடச் சொல்லிவிட்டார்கள். மலர்வதற்கு முந்தைய பருவத்துப் பூவினை ஒத்திருந்தன அவளது மார்பகங்கள். அம்மாவும் அதை அடிக்கடி கவனித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. கண் அங்கு போன வேகத்தில் வேறெங்கோ அலைபாய்ந்துவிடும். பள்ளியில் ப்ரா போடச் சொன்னதைக் கேட்டதும் அதே போல் ஒரு முறை பார்வையை ஓடவிட்டாள். இப்போதே என்ன அவசரமோ என்று முணுமுணுத்தவாறே வாங்கித் தந்தாள். எப்படிப் போட வேண்டும் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு அகன்றாள்.

அதுவொரு வெள்ளை நிற ப்ரா. பின்புறம் இருந்த ஊக்கு கைக்கு எட்டவே இல்லை. அதை மாட்டுவதற்குள் வியர்த்துக் கொட்டி கையும் வலிக்கத் தொடங்கியிருந்தது. மார்பகங்களை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்தாற்போன்ற உணர்வு. அம்மா மல்லிகைப்பூக்களை டிபன் பாக்ஸில் போட்டுத் தண்ணீர் தெளித்து வைப்பாள், சில நாட்கள் வாடாமல் இருக்க. அது போல் தன் பூவை வியர்வையோடு பத்திரமாக வைத்துவிட்டதைப் போலிருந்தது.

அம்மா ப்ராவையும் மார்பையும் ஒரு முறை உற்றுப் பார்த்தாள்.
‘அடுத்த வாரம் டெஸ்டுக்குப் படிச்சுட்டியா?’ என்றாள். நன்றாக இருக்கிறது என்றுகூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று அம்மாவின்மேல் கோபம் வந்தது சாதனாவுக்கு.

பள்ளியில் சில தோழிகளிடம் ப்ரா போட்டிருப்பதை சாதனாவே போய்ச் சொன்னாள். அன்றைக்கெல்லாம் பெரிய மனுஷியாகிவிட்டதைப் போன்ற மிதப்பில் அலைந்தாள். அவ்வப்போது கை தானாக மார்புப் பக்கம் போய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கப் பரபரக்கும். கிரீடங்களைச் சுமந்து கொண்டிருப்பது போல் ஒரு நிமிர்வு. கூடவே தன்னைத் தானே ரசிக்கும்போது எழும் கூச்சம்.

மாலையாவதற்குள் அடிப்பகுதியைச் சுற்றிலும் வியர்த்து அரிக்கத் தொடங்கியிருந்தது. வீட்டுக்கு வந்ததும் ப்ராவைக் கழற்றினாள். விடுதலை! என்று மார்பகங்கள் துள்ளிக் குதிப்பது போலிருந்தது. தோள்பட்டையில் பட்டையாய்த் தடம் பதித்திருந்தது ப்ரா. இனி எப்போதும் உன் வாழ்வில் இருக்கப் போகிறேன் என்பதுபோல் அழுத்தமாக. இரண்டு தோள்பட்டைகளிலும் மார்பகத்தின் அடிபாகத்திலும் பட்டையாய் பெல்ட்டால் அடிவாங்கிய தழும்புபோல் இருக்கும் அம்மாவின் ப்ரா தடம் நினைவுக்கு வந்தது.

ஒரு வாரத்திற்குள் ப்ரா போரடித்துவிட்டது. அதில் இருந்து விடுபடுவற்காகத் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதுவும் அவளுக்குப் புரிந்துபோனது. பலநேரங்களில் அனிச்சையாக, சில நேரங்களில் வேண்டாவெறுப்பாக ப்ரா அவளோடு ஒட்டிக்கொண்டது.

அது பெரிய கடை. ப்ராவுக்கு மட்டுமே தனியாகப் பெரிய பகுதி இருந்தது. சாதனா இங்கு முன்பே வந்திருக்கிறாள். அளவும் பிராண்டும் சொல்லி வாங்கிச் சென்றிருக்கிறாள். அது அவளுக்குத்தான் என்றுகூடச் சொன்னதில்லை. சேல்ஸ் பெண்களைப் பார்த்தாலே அவளுக்குக் கூச்சமும் தயக்கமுமாக இருக்கும். அங்கு அனைவரும் மார்பையே ஊன்றிப் பார்ப்பார்கள். யாருக்கும் அது வித்தியாசமாகவும் தெரிவதில்லை. முழுதும் பெண்கள்தான். கூட வந்த சில ஆண்கள், பக்கத்தில் உள்ள டாய்ஸ் செக்‌ஷனிலோ, எதிரில் இருக்கும் பெல்ட் செக்‌ஷனிலோ நின்றுகொண்டிருப்பார்கள். ‘முடிந்ததா’ என்பதுபோல் அவ்வப்போது லேசாக எட்டிப் பார்த்துக்கொள்வார்கள்.

முகமும் மார்பகங்களும் மட்டுமே கொண்ட பொம்மைகள் அப்பகுதியைச் சுற்றிலும் இருந்தன. சில இடங்களில் முகமற்ற வெறும் மார்பகப் பொம்மைகள். பல வகையான மாடல், கலரில் ப்ராக்கள் போட்டுக்கொண்டு ‘என்னைப் பார்’ என்பது போல் அந்தப் பகுதியின் மேல் அலமாரிகளில் வீற்றிருந்தன. சரியாக அவற்றிற்கு மேலே சிறிய விளக்குகள் போடப்பட்டு வெளிச்சம் பாய்ந்திருந்தது. வெளிர் ரோஸ் நிறத்திலான பொம்மைகளுக்கு எல்லா நிற ப்ராக்களும் எடுப்பாக இருந்தன. சாதனாவின் கண்கள் அவற்றையே சுற்றிச் சுற்றிப் படமெடுத்தன. பொம்மைகளுக்கு மாட்டப்பட்டிருக்கும் ப்ராக்கள் எல்லாம் வெகு அழகாகவும் கச்சிதமாகவும் இருப்பதாய்த் தோன்றியது அவளுக்கு. மார்பகத்தைச் சுற்றிலும் ப்ரா தடமும் இல்லை. பொம்மை மார்புகள் அளவில் சிறிதாக, வடிவத்தில் நேர்த்தியாக, கொஞ்சமும் தொய்வின்றி நின்றன. மார்பகத்திற்கு ஏற்ற பிராவா? பிராவுக்கு ஏற்ற மார்பகமா? முதலில் தயாரிக்கப்பட்டது எதுவாக இருக்கும்?

சித்தி நேராக ஒரு பிரபலமான ப்ராண்ட் பகுதிக்கு அழைத்துப் போனாள். சேல்ஸ் பெண் சிரித்தபடி ‘எந்த மாதிரி ப்ரா வேண்டும்?’ என்று கேட்டாள். சித்தி அதே கேள்வியைத் தமிழில் சாதனாவைப் பார்த்துக் கேட்டாள். சாதனாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரியான அளவு ப்ரா என்று மட்டும்தான் மனம் சொன்னது. அதை எப்படிச் சொல்வது? நேரத்தை வீணாக்க விரும்பாத சேல்ஸ் பெண் ‘முதலில் சில மாடல் காட்டுகிறேன் பாருங்கள்’ என்றபடி எடுத்துக் காட்டத் துவங்கினாள்.

வயர்டு ப்ரா என்று ஒரு மாடலைக் காட்டினாள். ப்ராவின் கீழ்ப்பகுதியில் நடு மார்பில் இருந்து அக்குள் பகுதி வரைக்கும் மெல்லிய கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ‘சிலருக்கு அது பிடிப்பதில்லை ஏனென்றால் அது கொஞ்சம் இறுக்கமாகப் பிடிப்பதைப் போலிருக்கும்’ என்று சொன்னாள். ஆனால் அது போடுவதால் மார்பு தொங்குவது போல் இல்லாமல் சற்றுத் தூக்கினாற் போல் அழகாக இருக்கும் என்றபடி ப்ராவை விரித்து, அந்த ப்ராவுக்குள் மார்பு இருப்பதைப் போன்ற பாவனையுடன் அதன் வயரைத் தொட்டு மேலே இழுத்துக் காட்டினாள். மேலேறி நின்றது கம்பி. ‘கம்பி குத்திவிட்டால்?’ சாதனா கேட்டாள். கம்பியைச் சுற்றிலும் துணி இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் அப்படியே வெளியே வந்துவிட்டாலும் சின்னதாக சிராய்ப்பு தவிர பெரிதாக ஒன்றும் இராது என்றும் பதில் தந்தாள் சேல்ஸ் பெண்.

சாதனா அந்த ப்ராவைக் கையில் எடுத்தாள். கம்பியைத் தொட்டுப் பார்த்தாள். வளைந்த சிறு கம்பி. அதற்குள் மார்பகங்களை வைத்துவிட்டால் போதும். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும். சிறைக்கம்பி போல், எல்லை தாண்டி வந்துவிடக் கூடாது என்ற உத்தரவுடன்.

சித்தியும் சேல்ஸ் பெண்ணும் அவ்வப்போது சாதனாவின் மார்பை ஆய்வு செய்வதைப் போல் கண்களால் அளந்தனர். சித்தி வேறு மாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சேல்ஸ் பெண் இன்னொரு மாடல் ப்ராவைக் கொண்டு வந்தாள். அந்த ப்ரா அடர் நீலக் கலரில் பளபளவென்ற துணியில் இருந்தது.

ப்ரா கடையில் சாதனாவுக்கு சுவாரசியமான ஒரே விஷயம் அதன் வண்ணங்களும் வேலைப்பாடுகளும்தான். வெள்ளை, கருப்பு, தோல்நிறம்தான் பெரும்பாலும். அரிதாக சில அடர் வண்ணங்கள். நல்ல மயிற்கழுத்து நிறத்தில் லேஸ் வைத்த ப்ரா ஒன்று சாதனா கண்ணில் பட்டது. பக்கத்தில் உள்ள இன்னொரு ப்ராண்ட் ப்ராக்களை எட்டிப் பார்த்தாள். அங்கு ரத்தச் சிவப்பு நிறத்தில் ப்ராக்கள் இருப்பது தெரிந்தது.

‘இதெல்லாம் போட்டுப் பாரு’ சித்தி ஐந்து வகையான ப்ராக்களை சாதனாவின் கையில் திணித்தாள்.

‘இத்தனையுமா?’

ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள் சாதனா. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும் தெரிந்தது. எல்லாமே ஒரே மாதிரியும் தெரிந்தது.

‘இது இரண்டும் போட்டுப் பார்க்கிறேன் சித்தி’

‘இந்தா, இதையும் வச்சுக்கோ’ என்றபடி இன்னொன்றயும் திணித்தாள்.

டிரையல் ரூம். முழுக்கண்ணாடி, பிரகாசமான விளக்கு. சுற்றிலும் ப்ராவுடன் நிற்கும் பெண்கள் போட்டோ, மேல்கூரையையும் விட்டுவைக்கவில்லை. கைப்பையை வைக்க சிறு டேபிள் இருந்தது. அதில் ப்ராவை எல்லாம் வைத்தாள். கண்ணாடி இல்லாத இன்னொரு பக்கம் திரும்பி நின்றுகொண்டாள். ஊக்கு போட்டு முடிந்ததும் திரும்பிக் கண்ணாடியில் பார்த்தாள்.

‘சரியா இருக்கா?’ சித்தி கேட்டாள்.

எது சரி? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாவற்றையும் மறைக்கும்படி இருந்தது அந்த ப்ரா. ஆனால் கொஞ்சம் அழுத்துவது போலவும் இருந்தது. பெரிதாக எடுக்கலாமோ? அடுத்த இரண்டையும் வேகமாகப் போட்டுப் பார்த்தாள். ஊக்கு போட முடிகிறதா என்பதைத் தவிர வேறு என்ன பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை அவளுக்கு. ‘சரியாக இருக்கிறது சித்தி’ என்று குரல் கொடுத்துவிட்டுப் பழைய ப்ராவைப் போட்டுக்கொண்டாள்.

நர்சிங் ப்ரா கேட்டு வந்த ஒரு பெண்ணைக் கவனித்தாள் சாதனா. இரண்டு பக்கமும் மார்பின் நடுவில் சிறிய ஜிப் வைத்திருந்தது அந்த ப்ராவில். ஜிப்பின் தரத்தைக் காட்டுவதற்காக அதைப் பல முறை வேகமாக மூடியும் திறந்தும் காட்டினாள் சேல்ஸ் பெண். திறந்ததும் வெறுமை காட்டும் அந்த ப்ரா மூடிக்கொண்டதும் ஏதோ ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறேன் என்பதுபோல் காட்சியளித்தது.

சித்தி அவளுக்கென்று சில ப்ராக்கள் எடுத்திருந்தாள். சாதனாவிடம் அதைக் காட்டி சித்தி ஏதோ பேசத் தொடங்க, கடைப்பெண் ‘இதைப் பேக் செய்யட்டுமா’ என்று
அவளது காரியத்திலேயே குறியாக நின்றாள்.

காத்திருந்தாற்போல், சித்தியைக் கூட்டிக்கொண்டு அந்தப் பெண் பில் போடும் இடத்துக்குப் போனாள். சாதனா மெதுவாக இருபக்கமும் பார்த்தபடி நடந்தாள். எஸ்கலேட்டரின் முகப்பில் நின்றபடி மேலே எட்டிப் பார்த்தாள். மஞ்சள் நிறத்தில் பூ போட்ட வான்நீல நிறச் சட்டை அணிந்தபடி ஒரு பொம்மை. சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் போட்டிருக்கவில்லை. தலையில் மஞ்சள் நிறத் தொப்பி, பிங்க் நிற ஷார்ட்ஸ். பெண்கள் பகுதியின் முகப்பில் என்ன இருக்கிறதென கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்றெண்ணியபடி நோட்டம் விட்டபோது சித்தி கையில் பையுடன் வந்துகொண்டிருந்தாள். நடந்தபடியே பைக்குள் இருந்து ஒவ்வொரு ப்ராவாக எடுத்து நிறமும் அளவும் சரியாக வைத்திருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டாள்.

‘எல்லாம் சரியா இருக்கானு நீயும் ஒரு தடவ பார்த்துரு சாதனா, மாறிப் போச்சுனா ரிடர்ன் பண்ணவும் முடியாது.’

சித்தி நீட்டியதும், பையைக் கையில் வாங்கி உள்ளே பார்த்தாள். உள்ளே பல நிறங்களில் பல ப்ராக்கள் குவிந்து கிடந்தன. என்னென்ன வாங்கினோம் என்பதே குழம்பிப் போயிருந்த அவளால் எப்படி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்ல முடியும்?

எஸ்கலேட்டரில் இறங்கும்போது ப்ரா பகுதியின் பொம்மை வரிசையைப் பார்த்தாள். அதே அளவான சிரிப்போடு அவளைப் பார்த்தன.

எம்.ஆர்டியில் ஏறி உட்கார்ந்ததும் சித்தியின் மார்புப் பக்கம் சாதனாவின் கண்கள் தானாய்ப் போயின. ஓரக்கண்ணால் பக்கவாட்டில் பார்க்கையில் கடை பொம்மையின் அதே கச்சித வடிவம். உடலோடு ஒட்டியிருக்கும் சுடிதாரின் உள்ளே சொன்ன பேச்சைக் கேட்கும் குழந்தையாய் அந்த மார்பகங்கள். ப்ராவை நன்றாகப் பார்த்து வாங்கத் தெரிந்தவள்தான் சித்தி.

அருகே இருந்த அந்த இரண்டு பேர் தொடக்கக் கல்லூரிப் பெண்களாக இருக்க வேண்டும். அவர்களின் இளமுலைகளும் ப்ராவும்தான் அவளது கண்ணிற்குப் பட்டது. கைக்குழந்தையுடன் ஒரு பெண் இருந்தாள். அவளது மார்பகங்கள் சற்று சரிந்தாற்போல் இருந்தன. டிசர்ட்டுக்குப் பின்னால், சுடிதாருக்குள், டிரஸ்சுக்குள், சர்ட்டுக்குள், சேலை பிளவுசுக்குள், க்ராப் டாப்பிற்குள் என எம்.ஆர்.டி முழுதும் மார்பகங்கள் நிறைந்திருந்தாற்போல் இருந்தது.

அடுத்த ஸ்டேஷனில் கூட்டமாய் ஆட்கள் ஏறினார்கள். அவளுக்கு நேரெதிரே ஒருவன் நின்றான்,மேல் கம்பியைப் பிடித்தவாறு. எம்.ஆர்டி வாசல் திறந்த நேரம், அடித்த காற்றில் அவனது டிசர்ட் உடலோடு ஒட்டிக்கொண்டதால் அவனது மார்பகங்களின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இளம்பெண்களின் மார்பகங்களைப் போல் சிறிய கூம்பாக இருந்தன. அவன் தன் மார்பகத்தை மறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. சட்டை தொளதொளவென்று இருந்தது. அதுவும் மார்பகத்தை மறைக்கத்தானா என்று தெரியவில்லை. காற்றில் டிசர்ட் ஒட்டியிருப்பதால் முலைக்காம்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. அவனிடம் உனக்கு பேடெட் வகை ப்ராதான் சரியாக இருக்கும் என்று சொல்லத் தோன்றியது.

அவளுக்கு நேரெதிரில் இருந்த பெண் எழுந்துபோய்விட, அவன் அங்கு உட்கார்ந்தான். எதிரில் அவனது மார்பையும், குனிந்து தனது மார்பையும் என மாறி மாறிப் பார்த்தாள் சாதனா.

சட்டென்று அவளது மார்பகங்கள் காணாமல் போய்விட்டதைப் போன்ற உணர்வு. கனம் குறைந்தாற்போல் ஒரு கணம். மீண்டும் வந்து விழுந்து பாறாங்கல்லாய்க் கனப்பது போல் மறு கணம் என அழுத்தியும் நெகிழ்த்தியும் ஆட்டம் காட்டின அவை. சாதனா தனது மார்பகங்களை உற்று நோக்கினாள். அவை அங்குதான் இருந்தன. எழுந்து பறக்கப் போகிறோம் என்பது போல் லேசாக அசைந்துகொடுத்தன. அவள் தன் இரு கைகளால் இரு மார்பகங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். மடியில் அவள் கைகளுக்குள் இருந்த பை கீழே சரிந்தது. அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த ப்ராக்கள் தெறித்து விழுந்தன. கருப்பு, சிவப்பு, தோல்நிறங்களில் ஒன்றன்மேல் ஒன்றாய் ஒழுங்கின்றி விழுந்திருந்தன. அங்கிருந்த அனைவரின் கண்களும் சில நொடிகள் அந்த ப்ராக்கள் மேல் நிலைகொண்டன. பின் நகர்ந்துவிட்டாலும், ஓரக்கண்ணால் அளந்தபடியே இருந்தன. யாரும் பார்ப்பதற்குள் எடுத்துவிடும் அவசரத்துடன் சித்தி வேகமாக எழுந்தாள். சிதறிக்கிடக்கும் ப்ராக்கள் எல்லாவற்றிற்கும் மேலே அந்த நீலநிற ப்ரா பொம்மைக்கு மாட்டப்பட்டதைப் போல் முற்றிலும் விரிந்து, அளவும் வடிவமும் காட்டியபடி கிடந்தது.

அதற்குக் கொஞ்சமும் கூச்சமே இல்லை.

***

காலச்சுவடு நவம்பர் 2024

Leave a Reply

%d bloggers like this: