மோகன் மாமா இறந்துவிட்டாராம்
தொலைபேசியில்
அம்மாவின் கம்மிய குரல்

பால்யத்தில் சாவின் கதவுகளைத் திறந்துவைத்த
சாரா அக்காவின் அரளிவிதை தொடங்கி
ஊன் சுருங்கி உயிர் குறுக்கிய அப்பத்தா வரை
வரிசைக்கிரமமாக மரண முகங்கள்
வந்து மறைகின்றன

அவ்வப்போது தூசு தட்டி மேலெடுத்து வைக்கும்
இறந்தகாலம் முடித்து
எந்நேரமும் மடியிலேற்றி வைத்திருக்கும்
நிகழ்காலம் நிகழ்த்தி
ஆழியின் ஆழத்திற்குள் அமிழ்த்திக் கிடக்கும்
எதிர்காலத்திற்குள்
குறிபார்த்துக் கொத்த வரும்
மீன்கொத்தியை
சிறியதொரு தலையசைப்பில்
உதறித்தள்ளிவிட்டுக் கேட்கிறேன்
‘எப்போது எடுக்கிறார்களாம்?’

Leave a Reply

%d bloggers like this: