தேவதையாகுதல் எளிது

கறை படியும் அபாயத்துடன்
அன்றாடம் வெள்ளை
உடுத்திக்கொள்ளக்கூட வேண்டியதில்லை

பறக்கும் நேரம் போக
மற்ற நேரங்களில்
கழற்றி வைக்கும் வசதியின்றி
சிறகுகளைச் சுமந்தமைதலும் தேவையில்லை

வரம் எப்போது வேண்டுமானாலும்
கேட்கப்படலாம் என்ற பதட்டத்தில்
மந்திரக்கோலைக் கையில்
ஏந்தியிருக்கும் அவசியமும் இல்லை

கண்கள் கூசும் ஒளிவட்டத்திற்குள்
கனகச்சிதமாகப் பொருந்தி
அசையவும் தேவையில்லை

பரிசுத்தமெனும் நிலையற்ற மதிப்புருவைப்
பற்றிக்கொண்டு மாறிலியாய்
தகவமைத்துக்கொள்ளும் அவசியமில்லை

எந்நேரமும் புன்னகையைப் பூசிக்கொண்டு
உணர்ச்சியற்ற கண்களோடு
அருளிக்கொண்டே இருக்க வேண்டிய
கட்டாயமும் இல்லை.

கருணையும் காருண்யமும்கூட
இரண்டாம்பட்சம்தான்

பிறந்த கணமே
தேவதையாகிவிடலாம்
கருப்பையும் குறியும் மட்டுமே போதுமானது
முலைகள் முளைவிட்டுக்கொள்ளும்
என்பது நிச்சயமென்பதால்.

Leave a Reply

%d bloggers like this: