ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்

அகத்திய மாமுனி, சாமிநாதன், ரவி, அவர்கள் சந்திக்கும் பெண்கள் என திருவண்ணாமலையை வலம் வரும் கதை. முக்கிய கதாபாத்திரமான ரவி, மற்ற சில கதாபாத்திரங்கள் மற்றும் கதாசிரியர் என அவரவர் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. இது கதையின் மையமான விலகலும் ஒன்றிப்போதலுமாகச் சுழலும் உறவுகளின் முரண்களை உணர்த்தும்விதமான கதை சொல்லல் முறையாக நாவலுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஒருவிதப் பித்துநிலையில் உழலும் கதாபாத்திரங்களின் மனநிலையைக் காட்டுவதற்கு ஏற்ற கதை சொல்லல் முறையும் மாயத்தன்மை காட்டும் விவரிப்புகளும் மொழியுமாக விரிகிறது ஓரிதழ்ப்பூ.

ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு போன்ற பல்வேறு வார்த்தைகளால் மிகவும் ஜாக்கிரதையாகக் கட்டமைக்கப்பட்டுக் கண்காணிப்பில் இருக்கும் காமம் என்னும் உணர்வை, அதன் இயல்பு குலைக்காமல் கொண்டாடியிருக்கும் முறை நிச்சயம் பாராட்டுக்குரியது. குடும்பம் என்னும் அமைப்பு தரும் அழுத்தம், அதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்கள், எதிர்பாலின ஈர்ப்பின் இயல்பு எனப் பல்வேறு சமூகக் கட்டுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் இந்த நாவல் தொட வேண்டிய ஆழம் பெண் கதாபாத்திர வடிவமைப்பில் தோற்றுப்போய்விட்டதாகத் தோன்றுகிறது.

ரவி வாழ்வில் காணும் பெண்களாக தோழி ரமா, மனைவி அங்கை, அமுதா அக்கா என நீள்கிறது ஒரு பட்டியல். பால்ய வயதில் காதல் கொண்ட பக்கத்துவீட்டுப் பெண்ணான அமுதா அக்காவின் கதை வயதான கணவர், இரண்டாம்தாரம் எனத் தேய்ந்துபோன ஒன்றாக மனதிற்கு ஒட்டாமல் நின்றுவிடுகிறது. கதையில் வரும் பல பெண் கதாபாத்திரங்கள் கண்டவுடன் புடவையை அவிழ்ப்பவர்களாக இருப்பது நெருடல். சாமிநாதனுடனான கலவிக்குப் பிறகு துர்காவின் கண்களின் அமைதி, அதே துர்கா மாமுனியினுடனான முதல் சந்திப்பில் அவருக்கு ஆயிரம் வருடப் பிறவி பயனை அடையச் செய்தல், அங்கை சங்கமேஸ்வரனைப் பார்த்த மாத்திரத்தில் தழுவிக்கொண்டு பாய்தல், அமுதா அக்கா கிழட்டுக் கணவரின் சாவு வீட்டில் எனக் கதையில் வரும் பல பெண் கதாபாத்திரங்கள் புடவையை அவிழ்க்கிறார்கள். மானுடல் கனவு காணும் அங்கை கதாபாத்திரத்திற்கு மட்டுமே பொருந்திப் போகிறது. அக்கனவுகளின் வழி நெருங்கிய உணர்வுகொண்டதாகிவிட்டதால் சங்கமேஸ்வரனிடம் உண்டாகும் நெருக்கமாக அதைக் காணலாம். அங்கையின் முகமறியா மானுடல் கனவும், அதன் மன அதிர்வுமே ரவிக்கு அவளை நெருங்கவிடாத மனநிலையைக் கொடுப்பதாகவும் படுகிறது. 

தன்னளவிலான ஒருவித முழுமையே யமுனா கதாபாத்திரத்தின் மீது வரும் பிரமிப்பிற்குக் காரணமாக்கப்பட்டிருக்கும் திஜாவின் மோகமுள் நினைவிற்கு வந்தது. மாமுனி, சாமிநாதன், ரவி மூவருமே ஒவ்வொரு விதத்தில் பெண்களைக் கண்டு வியப்புறும், பிரமிக்கும் அல்லது பயம்கொள்ளும் கதாபாத்திரங்களாக எடுத்துக்கொண்டாலும் அதற்கான பிரதான காரணமாக இந்நாவலில் காட்டப்படுவது உடலாகவே இருக்கிறது. அதனால் பெண் கதாபாத்திரக் கட்டமைப்புகள் அனைத்தும் ஆண் பார்வையில் பெண் உணர்வுகள் என்றே எஞ்சிவிடுகின்றன.

காமத்தின் வழியாக வாழ்வின் உச்சத்தை, உன்னதத்தை,  உணர்வுகளை, மனித உறவுகளின் முரண்களைச் சொல்ல முயலும் இந்நாவல், பல இடங்களில் அசல் வாழ்வியலை, குறிப்பாக, பெண் கதாபாத்திரங்களின் உணர்வுகளின் இயல்பைச் சித்தரிக்கத்  தவறிவிட்டது. ஆனால் இதை மட்டும் சொல்லி ஒதுக்க முடியாதபடிப் பல காட்சிப்படிமங்களைக் கொண்டுள்ளது. மலையுச்சியில் மழையில் கரையும் ரவியும், உலக்கையால் சாமிநாதனையும் பெரியசாமியையும் உக்கிரமாய்த் தாக்கும் துர்காவும் உணர்வுகளின் உச்சம். ஓரிதழ்ப்பூவைத் தேடி அலையும் அகத்திய மாமுனி இறுதியில் மலையடிவாரத்தில் பூக்களைத் தொடுத்து விற்பது என கதையின் ஆழம், வாழ்வியல் சிக்கல்களையும் எதார்த்தத்தையும் தொட்டுச் செல்கிறது. 

அமுதா அக்காவிற்குப் பிடித்த மருதாணிப்பூ, ரமணாசிரமத்தின் வாசனையாகவே மாறிப்போன நாகலிங்கப்பூ, துர்காவின் பூக்கடை எனப் பெண் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் பூக்களுடன் இணைத்துத் தூவப்பட்டு அன்றைய வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதே போல், ஆண் கதாபாத்திரங்களின் ஆழ் மன உணர்வுகள் கிளர்ச்சியுறும் தருணங்களில் எல்லாம் திடீர் மழை கொட்டித் தழுவுகிறது, அல்லது அவர்களின் மனக்குழப்பங்களைக் கழுவிச் செல்கிறது. உணர்வுகளின் உடைப்பாகப் பெய்யும் திடீர் மழை, அதே வேகத்தில் சட்டென்று நின்றும் போகும் தருணங்கள் ‘உறவுகள் தொடர்கதை…உணர்வுகள் சிறுகதை…’என்ற வரிகளை நினைவுபடுத்தின. சொற்களை வைத்து மாயஜால வித்தைகள் காட்டாத எளிய கதை சொல்லலும், (முத்தினேன்- ஜி நாகராஜன் :)), கதாபாத்திரங்கள் வடிவமைப்பும் நாவலின் பலம். ஒருவித மூர்க்கமும் தன்னிலை மறந்த செயல்பாடுகளுமாக உலவும் கதாபாத்திரத் தன்மைகளில் மட்டுமே திருவண்ணாமலையின் வறட்சி தென்படுகிறது. மற்றபடி அவர்களின் உள்மன வேட்கையின் பிரதிபலிப்பாக நாவல் முழுக்க பூக்களும், மழையும், காடுகளுமாக ஈரம் சொட்டும் காட்சிகள் பசுமை போர்த்தி நிறைக்கின்றன. 

Leave a Reply

%d bloggers like this: