தொலை நடையில்

தொலை நடையில்
முதுகு காட்டியிருக்கும்
மூவரின் புகைப்படத்தில்
நடு நபர் நானா
சம்சயம் நண்பனுக்கு

விரல் விரிப்பில்
மற்றிருவரைக் கொன்று
ராட்சத உருகொள்ளும்
அவனை உற்று நோக்குகிறேன்
நானெனச் சந்தேகிக்கப்படும் அவனில்
எனக்கான அடையாளங்கள்
எதுவும் தென்படவில்லை

என்னை அடையாளம் காண வேண்டிய தருணம்
எனக்கு வருமென்று நினைத்ததில்லை
அதுவும் பின்புறம்
முதுகறியா நான்
நீளும் நானறியா நான்கள்
கொஞ்சம் முகம் திருப்பியிருக்கக் கூடாதா
அவன்மீது கோபமாக வருகிறது

பக்கத்தில் இருப்பவன்
எனக்குத் தெரிந்தவன் என்றால்
ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்
உயரம் சுருட்டை முடி
சட்டை காலரின் சிறுகிழிசல்கள்
அடுத்த எட்டுக்குத் தயாராக
பின்னோக்கி உயர்த்தியிருக்கும்
வலது குதிகாலின் உலர் வெடிப்பு
நிச்சயம் அவன் பார்த்திபன்தான்

இப்போது நடுவில் இருப்பவனை
உற்று நோக்குகிறேன்
நானாகிவிட்ட அவன்
என்னைப் போலவே இருக்கிறான்.

Leave a Reply

%d bloggers like this: