வாழ்ந்தென்ன

வாழ்ந்தென்ன?
தரையில் கையூன்றி எழுந்தவாறே
எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள்
மாலை நான்கு
நல்ல நேரம்தான்
யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம்
வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும்
அள்ளி முடிந்து கொண்டையிட்டு
வாசற்கதவைத் திறக்கிறாள்
மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் 
அவ்வளவுதான் 
முடிந்தது

வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க
சற்றே தூக்கிப் பிடித்தபடி
படிக்கட்டில் கால் வைக்கும்போதுதான் 
கவனிக்கிறாள் 
உள்பாவாடையுடன் ஒட்டியிருக்கும் சேலை

விழுந்ததற்குப் பின்னான காட்சிகளை
கற்பனை செய்தவாறே
நினைவிடுக்கிலும் தோண்டிப் பார்க்கிறாள் 
எங்கேனும் நேரிலோ அல்லது செய்திகளிலோ 
ம்ஹூம்…
எப்படியும் இது சரியான உடையாகத் தோன்றவில்லை
தொடை மச்சம் வரை வெளிக்காட்டிடும் சாத்தியமுண்டு

அறைக்குள் விரைந்து அலமாரியை 
துழாவும் அவள் கண்ணில் 
பழைய துணிகளுக்குள்
அடி வண்டலாய்த் தங்கிவிட்ட 
கத்தரிப்பூ நிறப் பூக்கள் போட்ட வெள்ளைச் சுடிதார்
ஏதோவொரு பிறந்த நாளுக்கென்று அம்மா வாங்கித் தந்தது
வெண்மை தொலைத்துப் பழுக்கத் 
தொடங்கியிருந்த அது அணிந்ததும்
இடுப்பை இறுக்கமாய்ப் பிடித்துக்கொள்கிறது 
அனிச்சையாய்க் கண்ணாடி பார்க்கும் அவள் முகத்தில் 
தற்கொலைக்கேற்ற உடை கிடைத்துவிட்ட திருப்தி.


கனலி ஆறாவது இதழ்

Leave a Reply

%d bloggers like this: