ஆழி – சிறுகதை, ஜெயமோகன்

குறியீடுகளின் வழி உறவுகளில் தென்படும் முரண்களைத் தாண்டி, அவற்றைப் பிணைத்திருப்பது எது என்ற கேள்விக்கு இட்டுச் செல்லும் கதை. ஆதவனின் நிழல்கள் கதையின் இன்னொரு பரிமாணமாக அல்லது நீட்சியாக இக்கதையைச் சொல்லலாம்.

ஆழிகள் முற்றிலும் சூழ்ந்திருக்கும் ஒரு சிறு நிலப்பகுதியில்தான் நாம் வாழ்கின்றோம். ஆழிகள் சூழ் உலகு போல் உறவுகள் சூழ் வாழ்வு. நான் கடல்புரத்தில் வாழவில்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் எங்கே இருந்தாலும் நம்மைச் சூழ்ந்திருப்பது கடல்தான். 

அலை பெருகும் ஆழியின் அசைவுகளை நம்மால் என்றுமே கணித்துவிட முடியாது. அது நம்மை நகர்த்தும் திசையையும் பகுத்தறிய முடியாது. சூழ்ந்திருக்கும் அவற்றை விட்டு விலகியும் இருக்க முடியாது. ஆராய்ந்து அறிந்துவிட்டதாக நினைத்துதான் கால் வைப்போம். ஆனால் அது வேறு திசையில் இழுத்துச் செல்லும். அந்தந்த அசைவுகளுக்கு ஏற்றபடி அதன் போக்கில் நம்மை ஒப்படைத்துவிடுவது மட்டுமே நமக்கு முன்னிருக்கும் ஒரே சாத்தியம். 

ஆண் பெண் உறவுகளின் முரண்களைச் சொல்லும் எளிமையான கதை என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் அதன் மூலம் ஒட்டுமொத்த மனித உறவுகள் மட்டுமன்றி மனிதகுலத்திற்கும் இயற்கைக்குமான உறவுமுறைகளின் தன்மையைக் கூறி  அதன் சாத்தியங்களைத் திறக்கிறது இக்கதை. பெரும் முரண்களுக்குள் காணப்படும் ஏதோ ஒன்றுதான் உறவுகளை இழுத்துப் பிடித்து வைத்திருப்பதும். அந்தப் பெரிய கை, சமூகக் கட்டுப்பாடாக இருக்கலாம், எதிரெதிர்த் துருவ ஈர்ப்பாக இருக்கலாம், முரண்கள் தரும் சுவாரசியமாக இருக்கலாம், எந்நேரமும் அறுந்துவிடுமோ என்கிற சர்க்கஸ் கயிற்றில் நடப்பது போன்ற த்ரில்லாகவும் இருக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: