இசைப் பயிற்சி – சிறுகதை, தி ஜானகிராமன்

இசை அறிந்தவர்களின் புனைவுகளில் பெரும்பாலும் அதன் நுணுக்கங்கள், தொழில்நுட்பங்களைச் சொல்லி, அதன் உணர்வுகளைக் காட்ட முயல்பவையாக இருக்கின்றன. இசை நுணுக்கங்கள் அறியாத, அதனை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு அவை வாசிப்பில் அத்தனை நெருக்கத்தைக் கொடுத்துவிடுவதில்லை. இசையில் தேர்ந்த தி ஜானகிராமன் அவரது புனைவுகளில்  இசையைக் கையாண்டிருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்தும். இயற்கையுடன் ஒன்றியதாக இசையை இழைத்திருப்பார் தன் எழுத்துகளில். மோகமுள் நாவலில், வாழைப்பட்டையின் நுண் துளைகளை வாத்தியங்களின் துளைகளுடன் ஒப்பிட்டு சிலாகிக்கும் ரங்கண்ணாவும் அவரிடம் கற்றுக்கொண்டு சுவர்க்கடிகாரம் முதல் தெருவில் எங்கோ கேட்கும் சைக்கிள் மணிச் சத்தம் வரை இசையை இனம் கண்டு மகிழும் பாபுவும் வாசகருக்கும் அந்த அனுபவத்தைத் தந்துவிடுவார்கள். திஜாவின் எழுத்துகளில் பிரவாகமெடுத்து ஓடும் இசை இயற்கையின் எழிலோடு ஒன்றியதாக இருக்கும்.

அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றே ‘இசைப்பயிற்சி.’ பவழமல்லியின் செங்காம்பைப் பார்க்கும்போதெல்லாம் தன்யாசி ராகம் நினைவுக்கு வருவதாகச் சொல்லும் மல்லி கதாபாத்திரத்தின் வழி இசையைக் கசிந்தோடச் செய்திருக்கிறார்.  குப்பாண்டிக்கு இசைப்பயிற்சி கொடுக்கும் முடிவு, கலை உணர்வுக்கு ஆட்பட்டு அதன் போக்கில் எடுக்கும் முடிவு மட்டுமில்லை.  தனக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு, குழந்தையின்மை, தன் கனவு வாழ்க்கை கைக்கெட்டாமல் போவதற்குக் காரணமாக இருந்த சமூகத்தின் மீது அவர் காட்டும் எதிர்ப்பு. அதே சமயம், சமூகக் கட்டுப்பாடுகளை மீறும் மனம் எதிர்கொள்ளும் தடுமாற்றம், இயல்பாக மனித இயல்பாகச் செய்யப்படும் செயல்களுக்கு மற்றவர்களின் எதிர்வினையாக எள்ளலும் ஒடுக்குமுறையும், அதனால் உருவாகும் சுயபச்சாதாபம், இயலாமை, கோபம் ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் கதை. திஜாவின் புனைவெழுத்தில் உரையாடல்கள் பெரும்பலம். கதையை அதன் போக்கில் நகர்த்திச் செல்லும் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்ப்பேன். திஜாவின் புனைவுகளில் வாசிப்பனுபவத்தை நிறைவாக்குபவை எனத் தோன்றும். அவரது உரையாடல்கள் எளிமையாக, எள்ளலோடு, சொற்பமான சொற்களில் உணர்வுகளைக் கடத்தி, கதாபாத்திரங்களை மனதில் நிலைக்கச் செய்யும். அதே பாணியில் மல்லி, குப்பாண்டி, அத்தெரு மக்கள், மல்லியின் மனைவி அனைவரும் அவர்களது சொற்களின் வாயிலாகவே நமக்குள் பிரதியாகியுள்ளனர். 

Leave a Reply

%d bloggers like this: