எப்படிச் சொல்வது முதல் காதலை? – சிறுகதை, கெளதம சித்தார்த்தன்

சமீபத்தில் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை கெளதம சித்தார்த்தனின் ‘எப்படிச் சொல்வது முதல் காதலை?’ கதையின் களம், அதைக் கட்டியெழுப்பியிருக்கும் விதம் என எளிதாகக் கதைக்குள் ஒன்றிவிட முடிகிறது. 

ஒரு சமூகத்தின் ஐதீகத்தைச் சொல்லி அதன் வரலாற்றை மாற்றப் போகிறாள் மலாலா என்ற அறிமுகமே கதை நகரும் திசைக்கு கோடிகாட்டிவிடுகிறது. அவளுக்குள் சுடராடும் பெருங்கனலுக்கான தீனியாக வேட்டை வலம். மலாலா என்பதுவே வெளிப்படையான குறியீட்டுப் பெயர்தான். 

உருமால் கட்டிய இளைஞன் மலாலா என்பதை ஊகித்துவிட முடிந்தாலும் ஆண் வேடத்தில் இருக்கும் பெண் என்ற பார்வையில் அவளது வேட்டைப் பகுதியைக் காட்டாமல், இளைஞன் என்றே இறுதிவரை கொண்டு சென்ற முறை, பெண்ணின் வீரத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது எனத் தோன்றுகிறது. பெண் பார்வையில் வேட்டைக்குத் தயாராகுதலையும் அதன் சவால்களையும் சொல்லியிருந்தால் அது பெண் என்பதால் அவளுக்கு ஏற்படும் பிரச்சனை என்று மட்டுமாகவே ஆகிவிட்டிருக்கக் கூடும். இப்போது ஆண் எதிர்கொண்ட அத்தனையும் எதிர்கொண்டு ஒரு பெண் அங்கு நிற்கிறாள் என்பது மிகவும் இயல்பாகப் பொருத்திப் போகிறது. 

வேட்டை வலம் என்பது சிலம்பனுக்கு சமூக அங்கீகாரம், அதன் மூலம் கிடைக்கப் போகும் அனுகூலம். மலாலாவுக்கு தடைகளை மீறித் தன் மனதுக்குவப்பான ஒன்றைச் செய்துவிட்ட திருப்தியும் முதல் வேட்டை அனுபவமும். இருவரது செயலும் ஒன்றுதான் எனினும் மனநிலையும் நோக்கமும் வெவ்வேறு. கதையில் வேட்டைக் காட்சிகளை இருவர் பார்வையிலும் மாறி மாறிக் காட்டியிருப்பது, குறிப்பாக சங்கக்குழியைத் தாண்டும் பன்றியை இருவரின் வெவ்வேறு கோணத்தில் எழுதியிருப்பது காட்சியாக மனதில் நிற்கிறது. மலாலா சங்கக்குழிக்குள் ஒளிந்துகொண்டு காணும், தான் உயிர்க்காலை நோக்கி வைத்த குறி தவறியதில் வெறிகொண்டோடும் ஆண் பன்றியின் கருங்கல் கொட்டைகள்! 

வேட்டைக்கு முன்பான ஐதீகம், அச்சமூகத்தினரின் வேட்டை நடவடிக்கைகள், நாட்டாண்மையின் செயல்களுக்கு இளைஞர்களின் சிறு சலம்பல், சங்கமுள்,  குடைவேலா முள் என மரம் செடி கொடி புதர் முட்கள் வரையிலான விவரணைகள் அனைத்திலும் துல்லியம். 

சிலம்பனுக்குச் சரிசமமாக நின்று பன்றியை வீழ்த்தியது அவளுக்குள் கனன்று கொண்டிருந்த பெருங்கனலுக்குத் தீனி. மலாலாவின் முதல் காதல் – வேட்டை வேட்கை. வெளியே பறைசாற்றிக்கொள்ள முடியாதெனினும் வெற்றியை எட்டிவிட்டது. 

வேட்டை முடிவுறுவதை அறிவிப்பதுபோல் சங்க நாதம் ஒலித்ததும் சிலீரிடும் இரத்தம் தோய்ந்து நிற்கும் அவர்களது மனநிலையிலும் சட்டென்று மாறுதல். கைவிட்டுச் சென்றது வேட்டையை மட்டும்தானா? கொம்பூதுதலுக்குக் கட்டுப்பட்டுதானா?  

முதலில் யாருக்குள் கிளர்ந்தது காதல் என்கிற நீயா நானாவாக, சொல்லாமல் விடப்பட்ட காதலாக, காதல் முகிழ்ந்த ஒரு தருணமாக, மனவேட்கையின் வெற்றியாக, வெற்றியின் நிறைவில் வந்தமர்ந்த தோல்வியாக, சமூகக் கட்டமைப்புகளின் மீறலாக இரத்தம் பீறிடக் கிடக்கிறது கருவேலம்பூட்டும் இலந்தைப் பூட்டும் செருருகப்பட்ட பன்றி.


அசைவு விவாதக் குழு

Leave a Reply

%d bloggers like this: