சில சொற்கள்

(வீரான்குட்டி கவிதைகள் மொழியாக்க நூலுக்கு நான் எழுதிய குறிப்பு.)

தாய்மொழி என்றாலும் மலையாளத்தில் இலக்கியம் வாசிக்க ஒரு மனத்தடை இருந்தது. பல வருடங்களாகத் தமிழ் இலக்கிய வாசிப்புப் பழக்கத்தால், மற்ற மொழிகளில் வாசிக்கும்போது ஏதேனும் நுட்பங்களைத் தவறவிட்டுவிடுவோமோ என்கிற உணர்வு இருக்கும். மலையாளத்தில் சினிமா பார்ப்பது, பாடல்கள் பாடுவது, செய்தித்தாள், சிறுகதைகள் வாசிப்பது, உறவினர்களுடன் பேசுவது என்பதோடு சரி. தமிழாக்கம் செய்யப்பட்ட மலையாளப் படைப்புகளை வாசிப்பதே வழக்கமாக இருந்தது.

எம்.டி.வாசுதேவன் நாயரின் மஞ்சு நாவலைத் தமிழில் வாசித்ததும் மலையாளத்திலும் வாசித்துப் பார்க்கும் ஆவல் வந்தது. அவரது கவித்துவ நடையும் சொற்தெரிவும் அந்த நாவலுக்கான ஒரு மூட்டத்தை உருவாக்கிய விந்தை எனக்குப் பெரும் திறப்பாக அமைந்தது. அடுத்தடுத்து கல்பற்றா நாராயணன், கமலா தாஸ், நித்ய சைதன்ய யதி என்று கொஞ்சம் கொஞ்சமாக மலையாள இலக்கியம் என்னை உள்வாங்கிக்கொண்டது.

மலையாளத்தை மேலும் நெருங்கியறியும் முயற்சியாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என்கிற எண்ணம் வந்தது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை என மொழியாக்கம் செய்து பார்த்தேன். கவிஞர் யூமா வாசுகி சொன்னபடி, பயிற்சிக்காகச் செய்திகள் உட்பட மொழியாக்கம் செய்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள். மொழி நாவுக்கும் கண்களுக்கும் மனதுக்கும் பழகிவிட்டதென்ற உணர்வு வந்ததும் இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்யத் தொடங்கினேன்.

என்றுமே என் மனதுக்கு நெருக்கமானவை கவிதைகளே. மொழியின் நெளிவு சுழிவுகளும், உறுதியும் ஒருங்கே கொண்டிருக்கும் வடிவம். அதனால் மொழியின் சாத்தியங்களை அலசிப் பார்க்கும் அதே வேளையில், சாத்தியங்களுக்குள் அடங்கா சூட்சமமும் கொண்டவை கவிதைகள் என்று தோன்றுகிறது. கவிதைகளை மொழிபெயர்க்கையில் மொழிக்குள் விளையாடும் ஒரு குதூகலம் கிடைக்கிறது.

கவிஞர் வீரான்குட்டியின் கவிதைகளை மொழியாக்கம் செய்யத் தொடங்கியதும் அவற்றின் எளிமை என்னைக் கவர்ந்தது. படிமங்களின் கவிஞர் என்று சொல்லலாம். எளிய சொற்களின் வழி உருவாகும் ஆழமான படிமங்கள்! உணர்வுகளிலும் பெருவெடிப்புகள் ஏதுமற்ற எளிய உணர்வுகள். நுட்பங்களைச் சென்றடையும் வழியாக எளிமையை உணர்கிறேன். தன்னிடம் ஒளிவைத்துகொள்ள எதுவுமில்லை என்கிற நிலை, எளிமைக்கு ஒரு கம்பீரத்தைத் தருவதாகவும் தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பில் சவாலாக இருந்ததும் அதே எளிமைதான். மேல் பூச்சுகளையும் அலங்காரங்களையும் அகற்றி, சொற்களை நிர்வாணப்படுத்தும் செயலாக இருந்தது. கனமேறிக் கிடக்கும் சொற்களை லேசாக்கி, அதனைப் பறக்க விடும் அனுபவம். மலையாளம், தமிழ், ஆங்கிலம் மூன்று அகராதிகளும் மேசையில் திறந்துகிடக்கும். ஆனால் ஜன்னல் வழி வானில் சொற்களைத் துழாவிக் கொண்டிருக்கும் என் கண்கள். இதுவே மொழியாக்கம் என்றதும் என் நினைவில் எழும் சித்திரம்.

வீரான்குட்டி கவிதைகளில் மெல்லிய ஒலிநயம் இருக்கிறது, வாய்விட்டு வாசித்தால் அது புரிபடும். சந்தம் கவிதையின் தொனியுடன் நெருங்கிய உறவுகொண்டது. மொழியாக்கம் செய்தபின் தமிழில் ஒவ்வொரு கவிதைகளையும் பல முறை வாய்விட்டு வாசித்தது, கவிதையின் சந்தத்தை முடிந்தவரை தக்க வைத்துக்கொள்ள உதவியது.

மொழியாக்கப் படைப்புகள் பலவற்றை வாசித்து சிலாகித்திருக்கிறேன் என்ற வகையில் எனக்கு மொழிபெயர்ப்புப் பணியின் மீது எப்போதுமே பெருமதிப்பு உண்டு. இப்போது மொழிபெயர்ப்பாளரின் கடமையையும் பொறுப்பையும் கூடுதலாகவே அறிந்துகொண்டேன்.

‘மிண்டாபிராணி’ மற்றும் ‘வீரான்குட்டி கவிதைகள்’ ஆகிய இரு தொகுப்புகளிலிருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்திருக்கிறேன். மொழிபெயர்க்க அனுமதியளித்த கவிஞர் வீரான்குட்டிக்கு எனது நன்றி.

தமிழ்க் குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்டு வந்த காலகட்டத்தில், நாவில் தமிழும் மனதில் மலையாளமுமாக வாழ்ந்த என் அம்மாவை நினைத்துக்கொள்கிறேன்.

கவிதைகளை வாசித்து ஊக்கமளித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என் மனமார்ந்த நன்றி!

தொடக்கம் முதல் உடனிருந்து உதவிய நண்பர்கள் வே.நி.சூர்யா மற்றும் ராம்சந்தருக்கு எனதன்பும் அரவணைப்பும்!

சுஜா
சிங்கப்பூர்
6/10/23

Leave a Reply

%d bloggers like this: