ஒளிவிலகல்

அந்த புத்தர் சிலையின் தோளில் மட்டுமே சிறு கீறல். உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது. அதற்குப் போயா அம்மா இப்படி முடிவெடுத்திருக்கிறாள்? சுபாவுக்கு நம்பவே முடியவில்லை. ஊரில் இருந்து வந்ததும் குளிக்கக்கூட இல்லை. வீட்டு வாசற்படியில் உட்கார்ந்தவள்தான். புத்தரைக் கையில் எடுத்தாள். கண்ணை மூடி உலகம் மறந்த நிலையில் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போன்ற தோற்றம். இதழ்கடையோரம் சிறு புன்னைக் கீற்று. ஒரு முறை வட இந்தியா டூர் சென்றபோது காசியில் வாங்கியது. அவளுக்கு எட்டு வயதிருக்கும். எல்லாரும் காசியில் பட்டு, துணிமணிகள் என்று என்னென்னவோ வாங்க, அம்மா புத்தர் வேண்டும் என்றபோது, அந்தந்த இடத்தின் சிறப்பு என்ன என்று பார்த்து வாங்காமல் காசியில் போய் யாராவது புத்தரை வாங்குவார்களா என்றார் அப்பா. அம்மாவுக்கு அந்தக் கருப்பு கல் புத்தர் சிலை மிகவும் பிடித்துவிட்டது. கண்ணை மூடியபடி முகமும் தோள்களும் மட்டுமே கொண்ட சிலை. சுபாவின் உயரத்தில் பாதி இருந்த புத்தர் முகம் அவளுக்கும் பிடித்துவிட வாங்கியாகிவிட்டது. 

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அம்மா செய்தது வாசலுக்குப் பக்கத்தில் ஒரு சிறு மேஜை போட்டு, அதன்மேல் மரப் பலகை வைத்து புத்தரை வீட்டில் குடியேற்றியதுதான். வாசல் கதவைத் திறந்ததும் புத்தர் தெரியும்படி இருந்தது. செருப்புக்குப் பக்கத்திலா சாமியை வைப்பார்கள் என்ற அப்பாவின் அங்கலாய்ப்பை அம்மா கண்டுகொள்ளவே இல்லை. வீட்டின் அமைப்பு அப்படி. வாசலைத் தாண்டியதும் ஹால், ஒட்டினாற்போல் அப்பாவின் அறை, உட்புறம் கழிவறை, சமையலறை, சிறிய பூஜையறை. ஹாலில் டிவிக்குப் பக்கத்தில் வைக்கலாம் என்று அப்பா சொன்னார். ஆனால் வாசல்தான் மிகவும் பொருத்தமான இடம் என்பது போல், வருவோர் போவோர் எல்லாம் புத்தரைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தையாவது பாராட்டிப் பேசாமல் போக மாடார்கள். அம்மா புத்தர் சிலைக்குப் பூஜை எதுவும் செய்து அவள் பார்த்ததில்லை. தினம் ஏதேனும் பூக்களை அதன் அருகில் வைப்பாள். சில நிமிடங்கள் அதன் முகத்தை உற்று நோக்குவாள். அவ்வளவுதான். 

இரண்டு வாரம் முன்பு அதில் கீறல் விழுந்துவிட்டது. அப்பா போன் செய்து சொன்னபோது ‘இதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயமாப்பா? வேற வாங்கிக்கலாம்’ என்று சாதாரணமாகச் சொன்னாள். அடுத்து அப்பா சொன்ன விஷயமும் முதலில் அப்படித்தான் தோன்றியது. ஒரு வயதிற்குப் பிறகு மனிதர்களுக்கு வயது அப்படியே இறங்கத் தொடங்கி மறுபடியும் குழந்தைகளாகத் தொடங்குகிறார்கள். 54 வயதாகும் அம்மாவின் இந்தப் பேச்சும் சுபாவுக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனால் அப்பாவின் கம்மிய குரல் ஒன்றே அவளை இங்கே அழைத்துவரப் போதுமானதாக இருந்து. 

அம்மா தோட்டவீட்டிற்குப் போயிருக்கிறாளாம். வாசலில் இருந்து ஹால் சேரில் அமர்ந்திருக்கும் அப்பாவைப் பார்த்தாள். ‘வா அம்மா’ என்று தலையசைத்தது மட்டும்தான். அப்பா இரத்த அழுத்தம், நீரிழிவு என வயோதிகத்தின் வரவுகள் இந்த இரண்டு வருடங்களில் அவரைச் சோர்வடையச் செய்திருந்தன. அம்மாவின் கவனிப்பு மட்டும் இல்லாவிட்டால் மிகவும் சிரமமாகி இருக்கும். எந்நேரமும் விளையாடிக் கொண்டிருந்த பொம்மையைப் பறிகொடுக்கப் போகும் தவிப்பும் அழுகையும் கண்ணில் தெரிய அப்பாவும் ஒரு குழந்தையைப் போல்தான் தெரிகிறார். பார்க்க பாவமாக இருந்தது. அவர் எதற்கும் இவ்வளவு கலங்கிப் பார்த்ததில்லை. எல்லாம் இந்தச் சிலையால்தான் என்று நினைக்கும்போதே சிறுபிள்ளைத்தனமான எண்ணத்தை நெட்டித் தள்ளினாள். முதலில் என்ன காரணம் என்று கேட்போம். பின்னர் என்ன செய்வது என்று யோசிக்கலாம். பாலா அதற்குள் மூன்று முறை போன் செய்துவிட்டான். 

‘அம்மாவுக்கு வேறு ஏதாவது…’

‘என்ன உளர்ற பாலா?’

‘இல்ல, திடீர்னு இப்படிப் பேசறாங்கன்னா….’

‘நீ முதல்ல போனை வை’

கொதிக்கும் மனநிலையில் இருக்கும் அவள் கையில் காலை வெயிலின் வெம்மை தெறித்து முகத்தைத் துளைக்கும் வெயில் பட்டும் பனிச்சாரலின் குளுமையில் சஞ்சரிப்பது போன்ற லயிப்பில் புத்தரின் முகம். 

அம்மா ஒரு கையில் பையும், ஒரு கையில் முருங்கைக்கீரைக் கட்டுமாகத் தெருவில் நுழைவது தெரிந்தது. காந்திபுரத்தில் இருந்து தோட்டவீடு இரண்டு கிலோமீட்டர் தூரம். அம்மாவுக்கு ஆட்டோ பிடிக்காது என்பதால் தனியாகப் போகும்போது நடந்தேதான் போவாள். வியர்வை, சேலைக் கசகசப்பு, களைப்பையும் மீறி அம்மாவின் முகம் ஒளிர்ந்தது. அம்மா அவளைப் பார்த்துவிட்டாள் என்பது தலையாட்டிச் சிரிப்பதில் தெரிந்தது. ஆனாலும் நடையில் எந்த வேகமும் கூட்டாமல் நிதானமாக வருகிறாள். 

உள்ளே நுழைந்ததும் ‘நீங்க சாப்பிட்டீங்களா? இட்லி செஞ்சு வைச்சுட்டுப் போயிருந்தேனே.’ அம்மா காலை நடைப்பயிற்சியாக தோட்டவீடு போய்விட்டு வருவது வழக்கம். அப்பா காலை உணவு சீக்கிரம் சாப்பிடுபவர் என்பதால் சமைத்து வைத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள். 

‘சாப்டேன்’ என்று பதிலளித்தபடி அப்பா அவர் அறைக்குப் போனார். எங்களுக்குத் தனிமையில் பேச வாய்ப்பளிக்க நினைத்திருக்கலாம்

‘நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும்’ என்பதுபோல், அதைப் பற்றி மட்டும் பேச்சு வராமல் தவிர்த்தாள். முருங்கைக்கீரைக் கட்டை எடுத்துக்கொண்டு ஹாலில் ஒரு பக்கச் சுவரில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்தாள் அம்மா. பொதுவாக அதுதான் அம்மாவிடம் பேசுவதற்கு ஏற்ற சமயமாக இருக்கும்.. அம்மா சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்தபடியே ரிமோட்டை எடுத்து டிவியைப் போட்டாள். அப்பாவுக்குப் பொதுவாக சத்தமே பிடிக்காது. அவர் டிவி பார்ப்பது அரிது. அப்படியே பார்த்தாலும் செய்தி சேனல்தான். அவளும் காலை நீட்டியபடி அருகில் உட்கார்ந்து கீரையைக் கையில் எடுத்தாள்.

‘மருந்து போட்டும் சரியாகவில்லையா?’ 

சுபாவின் காலில் மெட்டி போட்டிருந்த விரலைச் சுற்றியும் இருந்த சிவந்த தோலைப் பார்த்தவாறே கேட்டாள் அம்மா. 

சென்ற முறை இங்கு வந்தபோது டாக்டரிடம் காட்டி ஏதோ அலர்ஜி என்று மருந்து கொடுத்திருந்தார்.

‘இல்லம்மா, ஆனா வேற ஒரு தொந்தரவும் இல்ல…சும்மா சிவந்திருக்கு அவ்வளவுதான்’

‘கொஞ்ச நாளைக்குக் கழட்டி வச்சுடேன்’

அம்மா சேனலைத் தீவிரமாக மாற்றிக்கொண்டிருந்தாள். 

‘பரவாயில்லம்மா. பழகிடுச்சு, மெட்டி போடாமல் இருந்தா விரலே ஒரு மாதிரி தெரியுது’

ஒவ்வொரு சேனலாக மாற்றி கடைசியில் கார்ட்டூன் சேனலில் நிறுத்தினாள். அவ்வப்போது அம்மா அவளிடம் திரும்பி பேசினாள். தோட்டவீட்டைப் பற்றித்தான் பேச்சு முழுதும். பேச்சின் பின்னால் முன்பே தீர்மானிக்கப்பட்ட ரகசிய மெளனம் இருப்பது தெளிவாகப் புலப்பட்டது.

‘நீ வந்து பார் சுபா, ஈவினிங் போகலாம்’ என்றபடி ஆய்ந்த கீரை நிரம்பிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அம்மா எழுந்தாள். கீரைகளைத் துறந்த கீரைத் தண்டுகளும், பழுத்த இலைகளையும், பூச்சி வெட்டுப்பட்ட இலைகளுமாக முறம் முழுதும் நிரம்பி வழிந்தன. 

கொஞ்சம் தூங்கி எழுந்தால் நன்றாக இருக்கும்போல் இருந்தது. சுபா மாடிக்கு வந்தாள். மாடி அறைகள் பெரும்பாலும் மூடியேதான் கிடக்கும். அவளோ, பாலாவோ குடும்பத்துடன் வரும்போது பயன்படுத்திக்கொள்வார்கள். இருவரின் சில சாமான்கள் மட்டுமே உள்ள அந்த அறைகளை வாரம் ஒருமுறை வேலைக்காரியை வைத்து தூசு தட்டிச் சுத்தம் செய்து வைப்பாள் அம்மா. அவளுடைய அறைக்குள் நுழைந்து மெத்தையில் படுத்தாள். வழக்கமாக பெண்கள் கணவனுடன் சண்டை போட்டு வீட்டிற்கு வந்தால், பெற்றோர் சமாதானப்படுத்தி வைப்பார்கள். இப்போது எல்லாம் தலைகீழ். பாலா, நரேன் இருவரிடம் இருந்தும் குறுஞ்செய்திகள் வந்திருந்தன. ‘அம்மாவைக் கொஞ்சியாச்சா’ என்ற சிரிக்கும் மஞ்சள் முகத்துடன் நரேன் அனுப்பியிருந்த கேள்விக்கு ‘இனிமேல்தான்’ என்று பதில் அனுப்பினாள். திடீரென்று அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று சொல்லிக் கிளம்பி வந்துவிட்டாள். எப்படியும் இரண்டொரு நாளில் கிளம்பியாக வேண்டும். பாலாவின் கேள்விக்குறிக்கு என்ன பதில் அனுப்புவது என்று தெரியவில்லை. அம்மா அப்பா இருவருக்கும் இடையில் பெரிதாக எதுவும் வாக்குவாதங்களோ, சண்டையோ வந்து பார்த்ததில்லை. அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் அவ்வளவு அக்கறை. சென்ற வருடம் அம்மா கோவிலுக்குச் செல்லும் வழியில் தடுக்கி விழுந்து காலில் அடிபட்டபோது அப்பா எப்படி துடித்துப்போனார். ஒருவேளை அப்பா ஏதேனும் தவறாகப் புரிந்துகொண்டு சொல்லி இருப்பாரோ. அம்மா ஏதோ கோபத்தில் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்டு கவலைப்படுகிறாரோ. அப்படித்தான் இருக்க வேண்டும். அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம்.

அப்பாவின் அறையில் அவளுக்கு மிகவும் பிடித்தது ஆளுயரப் புத்தக அலமாரி. ஒரு பக்கச் சுவர் முழுதும் அடைத்ததைப் போல் ஆஜானுபாகுவாக நிற்கும். கண்ணாடிக் கதவுகளுடன் என்னிடம் ஒளிவுமறைவு எதுவும் இல்லை என்பது போல் ஈர்க்கும். சிலப்பதிகாரம் முதல் ரஷ்ய இலக்கியம் வரை அப்பாவின் கலெக்‌ஷன் எல்லாம் பெரிய பெரிய தடிமனான புத்தகங்களாக இருக்கும். யாருக்கும் புத்தகங்கள் இரவல் கொடுக்க மாட்டார். படிக்க வேண்டும் என்றால் அந்த அறையிலேயே படிக்க வேண்டும். வேலையில் இருந்து ஓய்வுபெற்றதும் இதுநாள் வரை விட்டு வைத்ததை எல்லாம் படித்து முடித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் படிப்பதுபோல் அறையிலேயே இருப்பார். 

இப்போதும் அவர் கையில் புத்தகத்தை வைத்தபடி ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். சாய்வுநாற்காலி லேசாக ஆடிக் கொண்டிருந்தது. கண் எழுத்துகளை மேய்வதுபோல் தோன்றினாலும் அவர் மனம் ஏதோ சிந்தனையில் இருப்பது தெரிந்தது. அவர் பக்கத்தில் போய் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி நின்றாள்.

‘அம்மாட்ட எப்படி ஆரம்பிக்கறதுனே தெரியல. நீங்க சொன்னது உண்மைதானா?’ 

‘நேத்து வக்கீல் வந்துட்டுப் போனார், ம்யூச்சுவல்னா பிரச்சனை இல்ல. யோசிச்சுட்டு சொல்லுங்கனு சொல்லிட்டுப் போனார்’ என்றபடி எதிர்ப்பக்கத்தில் இருக்கும் அலமாரியைப் பார்த்தார். சில காகிதங்கள் மின்விசிறிக் காற்றில் பக்கங்களைப் புரட்டியபடி படபடத்தன. 

‘என்னப்பா பிரச்சனை? எதுவும் சண்டையா?’

இரண்டுவாரம் முன்புதான் அம்மா பேசியிருக்கிறாள். அதற்குள் வக்கீல் வரை வந்திருக்கிறாள் என்றால் நிச்சயமாக இப்போது எடுத்த முடிவாக இருக்க வாய்ப்பில்லை.

‘என்ன நடந்துச்சுப்பா? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?’

‘சண்டைலாம் ஒன்னும் இல்ல’

‘புத்தர் சிலையில எப்படி கீறல் வந்துச்சு?’ 

‘யாரும் எதுவும் பண்ணல, திடீர்னு ஒருநாள் கீறல் தெரிந்துச்சு. அவதான் அதை கவனிச்சுருக்கா’

‘அம்மா வேற என்ன சொன்னாங்க?’

மீண்டும் ஆழமான மெளனம். இப்போது என்ன செய்வது? பாலா எளிதாகச் சொல்லிவிட்டான். நீ போய் அம்மா அப்பாவிடம் முதலில் பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று. இரண்டுபேரும் பேசக்கூடத் தயாராக இல்லை. ஏதாவது பேசி பிரச்சனை பெரிதாகிவிடாமல் இருக்க வேண்டும். அப்பா தன் பக்கம் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் அமைதியாக இருக்கிறாரா, இல்லை அம்மாவே சொல்லட்டும் என்று நினைக்கிறாரா என்பதுவும் புரியவில்லை. அம்மாவிடம்தான் பேசிப் பார்க்க வேண்டும். பெற்றோரிடம் காதலைச் சொல்லத் தயங்கும் பெண் குழந்தையைப் போல் அவள் வார்த்தைகளைக் கோர்த்து தயாரானாள். அம்மா ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டால் அடுத்து என்ன? எப்படிச் சமாதானப்படுத்துவது? இதெல்லாம் தெரிந்தால் நரேன் வீட்டில் என்ன பேசுவார்கள்? சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள்? அம்மாவுக்கு ஏன் திடீரென்று இப்படி ஒரு சிந்தனை வர வேண்டும்? பாலாவை வந்து பேசச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவோமா? வேண்டாம், சாயங்காலம் அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம்.

இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்தாற்போல் இருந்தது. முதலில் கண்ணில் பட்டது ஊஞ்சல். பாலா பிறந்து ஓராண்டில் இந்த வீடு வாங்கியதாகவும், அந்த வருடம் அம்மம்மா இறந்துவிட, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் சொற்ப வருமானம் வரும் ஸ்டெனோ வேலையை அம்மா விட்டுவிட்டதாகவும் அப்பா சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கு அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று ஆசை. அப்பா தான் முதன்முதலில் கட்டிய வீடு என்பதால் காந்திபுரம் வீட்டை விட்டு மாற சம்மதிக்கவில்லை. தோட்ட வீட்டின் முன்புறம் முழுதும் பூக்களும் ஒரு பெரிய வேப்ப மரமும் இருக்கும். பின்புறம் தென்னை மரங்களும் சில காய்கறிச் செடிகளுமாக கச்சிதமான அமைப்பைக் கொண்டிருக்கும். நடுவில் வீடு. இருபுறமும் திண்ணை. ஒரு ஹால், இரண்டு அறைகள், சமையலறை, கழிவறை. அந்த வீட்டை ஒட்டினாற்போல் அதே அமைப்பு கொண்ட இன்னொரு வீடு. அந்த வீடுகளை வாடகைக்கு விடுவது, பராமரிப்பது எல்லாம் அம்மாவின் பொறுப்பில் இருந்தது. வாடகைக்கு வருபவர்களுக்குப் பெரிதாக நிபந்தனைகள் எதுவும் போடுவதில்லை அம்மா. தோட்டத்தை நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்பது மட்டும்தான். பின்னால் ஒரு ஸ்டோர் ரூம். அதில் அம்மாவின் பழைய டைப்பிங் மெஷின், டிரங்கு பெட்டிகள், அம்மி, உலக்கை, ஆட்டுக்கல் என காந்திபுரம் வீட்டில் இருந்து வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட பல சாமான்கள் அடைந்து கிடக்கும். அங்கே கிடந்த ஊஞ்சல் பலகைதான் இப்போது வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த வீடு வாங்கிய புதிதில் அம்மா ஆசாரியிடம் சொல்லிச் செய்வித்து மரத்தில் கட்டினாள். சுபா ஒரு முறை தனியாக ஏறி ஆடி, கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேரும்படியாகிவிட்டது. அப்போது அப்பா கழற்றி உள்ளே போட்டதுதான். சுபா ஊஞ்சலில் உட்கார்ந்ததும் அது தனிச்சையாக அசையத் தொடங்கியது. 

அம்மா காந்திபுரம் வீட்டில் இருந்து கொண்டு வந்த பைகளைக் கீழே வைத்து சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மா வேறு உருக்கொண்டவளாய் ஆனாள். யாரோ புது மனுஷியைப் பார்ப்பதுபோல் இருந்தது. புத்தர் சிலையை வாசலுக்கு நேராக உள்ளே ஒரு ஸ்டூலில் வைப்பது தெரிந்தது. அந்த வீடு முழுதும் அம்மா நிரம்பியிருப்பதாகத் தோன்றியது. வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைவதே அம்மாவின் அந்தரங்கத்தில் தலையிடுவதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது. சிறிது நேரத்தில் பாட்டுச் சத்தம் கேட்டது. ‘அடி பெண்ணே…பொன்னூஞ்சல் ஆடும் இளமை…’ பக்கத்து வீட்டின் கோழிக் குஞ்சுகள் முற்றத்தில் கீச்கீச் என்று கத்திக் கொண்டிருந்தன. அம்மா அவைகளுக்குத் தானியங்களைத் தூவினாள். மோட்டார் போட்டு தென்னை மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சினாள். ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வந்து மதிலைச் சுற்றிக் கொடியாய்ப் படர்ந்திருக்கும் முல்லைப் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள். சேலையை இழுத்து ஏற்றிக் கட்டிக்கொண்டு ஒவ்வொரு கிளையாகப் பிடித்து வளைத்து பூக்களைப் பறித்தாள். இன்னும் மலராத மொட்டுகளில் இன்று மலரப் போவதை மட்டும் அவள் சரியாகக் கணித்து பறிக்கிறாள். பூவை மென்மையாகப் பற்றிய விரல்கள் காம்பில் மட்டும் சிறு அழுத்தம் கொடுத்து கொய்தன. ஒவ்வொரு பூ பறிக்கும்போதும் கொடியிடம் மன்னிப்போ, நன்றியோ தெரிவிப்பதுபோல் ஒரு வருடல். ஒரு புகைப்படமாய் பக்கவாட்டில் அம்மாவின் தோற்றம் கண்களில் பட்டது. அம்மா என்ற பிம்பம் அழிந்து ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்கத் தூண்டியது அந்தத் தோற்றம். 

பாலா அழைக்கிறான். சுபா ஊஞ்சலில் இருந்து சட்டென்று எழுந்து பின்புறம் சென்றாள்.

‘என்ன ஆச்சு சுபா? பேசிட்டியா?’

‘இல்ல’

‘ஏன்?’ 

‘அவசியம் இல்லனு தோனுது…’

‘எல்லாம் சரியாயிடுச்சா? அப்பாட்ட பேசினேன். தோட்டவீட்டுக்குப் போயிக்கீங்கனு சொன்னாங்க….’

தொடர்பைத் துண்டித்து அலைபேசியை அணைத்துவிட்டு வந்தாள். 

அம்மா ‘இப்போது சொல்…’ என்பதுபோல் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு சுபாவைப் பார்த்தாள். பக்கத்தில் சிறுகூடை நிறைய பூக்கள். 

‘அம்மா! அப்பா இதுக்கு…’

‘கண்டிப்பா ஒத்துக்குவார்…’ 

மாலை வெயிலின் மங்கிய வெளிச்சத்தில் புத்தரின் முகம் தெரிந்தது. சுற்றிலும் இருந்த முல்லைப்பூக்கள் மொட்டவிழ்ந்து மலரத் தொடங்கியிருக்க, தன் இட மாற்றத்தையோ, அதற்கான காரண காரியங்களையோ எதையும் உணராதவராய் கண்ணை மூடியபடி இருந்த புத்தரின் முகத்தில் அதே சிறுகீற்றுப் புன்னகை.

Leave a Reply

%d bloggers like this: