நோக்குங்கால்

Artwork by William E. Norton (Sunrise over Fishing Waters)

பலரும் தற்செயலாய்க் கண்கள் சந்தித்துக்கொள்ளும் அந்தத் தருணமேனும், ஒரு குட்மார்னிங் அல்லது புன்னகை அல்லது தலையசைப்பில் என்னை அங்கீகரித்துவிட, இவர்கள் மட்டும் அந்தச் சந்திப்பிற்கு வழியே இல்லை என்பதுபோல் கண்களை எங்கோ வைத்திருப்பது எப்படி? யாருக்கும் முகம் கொடுப்பதே இல்லை, ஏதோ வேறு உலகத்தில் சஞ்சரிப்பது போல. அவர்கள் உலகில் நான் இல்லை என்பது என்னை ஏனோ தொந்தரவு செய்தது. என்னுலகில் அவர்கள் பூதாகரமாகிப் போனதும் அதன் காரணமாகத்தான். 

இத்தனைக்கும், பார்க்குமனைத்துடனும் என்னைப் பிணைத்துக்கொள்ளும் சூட்சமம் தெரியும் எனக்கு. உச்சியில் பூத்துத் தொங்கும் கொன்றை, மாடிப்படியருகே ஒளிந்து நின்று தலை மட்டும் நீட்டும் தெருப்பூனை, தரையில் ஜோடியாக இசைத்து நடக்கும் சிட்டுக்குருவிகள், நடைபாதைக் கைப்பிடிக் கம்பியில் ஊர்வலம் போகும் சிவப்பு எறும்புகள் என அனைத்துக்கும் இடம் உண்டு, இந்த மூவர் தவிர.

தினம் காலைச் சிந்தனையை இந்த மூவர் ஆக்கிரமித்துவிடுவார்கள். காலணி அணிந்துகொண்டே நடையா மெதுவோட்டமா என்று முடிவெடுக்கும்போதே அவர்களின் தலையீடு தொடங்கிவிடும். உலகை ஓரிடத்தில் நிலைத்து நிறுத்திவிட்டு நான் மெதுவாக ஓடி நகரும் மெதுவோட்டம்தான் எனக்குப் பிடித்தமானது. அனைத்துமே நொடிக் காட்சிகளாகிவிடும். துள்ளல் நகர்வு தரும் உற்சாகத்தில் உலகம் ரம்மியமானதாகத் தோன்றும். நடையில் அனைத்தையும் ஊன்றிக் கவனிப்பதால், பல சிந்தனைகளைக் கிளர்த்தி மனத்தை சுறுசுறுப்பாக்கும். இன்றென்னவோ கண் விழித்தது முதலே மனம் அசுர வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. நடைதான் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுத்தேன். அந்த மூவரில் ஒருவரையாவது கண்ணோடு கண்காண வேண்டும்.

இருள் போர்த்திய உலு பண்டான் கால்வாய் மங்கலாகத் தெரிந்தது. இருபுறமும் மேடாக இருக்கும் நடைபாதையில் நிழல்களாய் சில அசைவுகள் தெரிந்தன. நடைபாதைகளை இணைக்கும் மேம்பாலங்கள் தோரண வாயில்கள் போல் வளைந்து நின்றன. ஏ4 தாளிற்கு அளவெடுத்து வரைந்த மார்ஜின் போல பாதைகளின் இருபுறமும் நெடிதுயர்ந்த மரங்கள் அடர்ந்திருந்தன. இருளில் துண்டு துண்டு காடுகள் போல் அத்தனை அடர்வுடன் காட்சியளிக்கின்றன, அருகில் உள்ள டோவர் காட்டின் ஒரு நீட்சி போலிருக்கிறது. முதல் குரலாய் எங்கிருந்தோ ஒரு குயில். என்னை எழுப்பும் அதே குரல். விடியலில் சேவல் கூவும் என்று படித்திருக்கிறோம். எங்கள் வீடு எப்போதுமே குயில் கூவித்தான் விடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் குரல்களின் எண்ணிக்கை கூடுகிறது. உருவங்களற்ற விதம்விதமான குரல்கள் விடியலுக்கு முகாந்திரமாக ஒலிக்கின்றன.

கிம் மோ பகுதியில் இருந்து நடைபாதைக்கு நுழையுமிடத்தில் அல்லது முதல் பாலத்துக்கு அருகில் இருக்கும் அசோக மரத்துக்குப் பக்கத்தில் முதலாமவரைப் பார்த்துவிடுவேன். 

வயது 60 இருக்கலாம். முழங்காலுக்கு சற்றுக் கீழே வரை உள்ள ஷார்ட்ஸும், காலர் டி சர்ட்டும் போட்டிருப்பார். இடது கையில் கட்டியிருக்கும் பலவண்ண நூல்களை அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொள்வார். அந்தக் கையில் வைத்திருக்கும் நீளக்குச்சியைச் செங்கோலைப் பிடித்திருக்கும் தோரணையில் வைத்திருப்பார். மெலிந்த உடலுக்குச் சற்றும் பொருத்தமில்லாத பெரிய வாட்சை வலது மணிக்கட்டு தாங்கிக்கொண்டிருக்கும். அந்தக் கையில் பெல்ட்டும் செயினுமாகச் சுருட்டி வைத்திருப்பார். நடக்கும்போது பாதங்கள் பக்கவாட்டில் திரும்பியிருக்கும். ஸ்லோ மோஷனில் நடக்கும் சாப்ளின். நாய்க்குட்டியைக் கூட்டிச் செல்வது போன்ற பாவனையுடன் செயினை இழுத்துப் பிடித்துக்கொண்டே நடப்பார். அவ்வப்போது நின்று குனிந்து பேசுவதும் உண்டு. சில சமயம் ரகசியக் குரலில், சில சமயம் கோபக் கத்தல்.

தூரத்தில் பார்த்ததுமே எனக்குள் ஒரு குறுகுறுப்பு தொடங்கிவிடும். கூடவே பயமும். என் கண்களைச் சந்திப்பதில்லை என்று விசனப்பட்டாலும் அப்படிச் சந்தித்தால் என்ன செய்வது என்பதில் பல குழப்பங்கள் எனக்குண்டு. சிரிப்பதா? சிரித்தால் அவரைக் கிண்டல் செய்வது போல் எடுத்துக்கொண்டு கோபப்படுவாரோ? அவரது இல்லாத நாயை நான் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? அதற்கும் வணக்கம் சொல்வதா? அதைப் பார்க்காதது போல் நடந்துகொண்டால் அவர் மனம் வருத்தப்படுமா? அவரே வந்து பேசினால் என்ன செய்வது? இல்லாத நாயுடன் பேசிக்கொண்டிருக்கிறாரே, அவருக்கு நிச்சயம் மனப்பிறழ்வாகத்தான் இருக்க வேண்டும். காயப்படாமல் நடந்துகொள்வது எப்படி? திடீரென்று தாக்கினால்? வேகம் கூட்டி அவரிடம் இருந்து முடிந்தவரையில் விலகி, அப்படியொருவர் அங்கு இருப்பதையே உணராதது போல் கடந்துவிடுவேன். என் கண்கள் நகர்ந்துவிட்டாலும், உடல் அவரது அசைவுகளை உணர்ந்தபடியேதான் இருக்கும்.

இன்றும் கால்கள் நடக்க கண்கள் தேடிக்கொண்டிருந்தன. பெரிதாக எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் மென்காற்று வீசிக்கொண்டிருந்தது. பசுமையின் மணம். பசுமைக்கென்று ஒரு மணம் இருக்கிறதா? நீரின் மணமா? அல்லது அங்கிருந்த தாவரங்களின் மணமா? அல்லது உயிரினங்களின் மணமா? பாசிகளின் மணமா? எல்லாம் கலந்த கலவையாகப் பசுமை மணம். நாசிக்குள் நுழையும்போதே ஒவ்வோர் அணுக்களையும் எழுப்பி அவற்றுள் புகுந்துவிடும் மணம். கால்வாயில் நீர் நிறைந்திருந்தது. அரைத் தூக்கத்தில் வெட்டும் மின்னல் ஒலி, டிரம்ஸ் ஓசை போல் இடி, ஊளையிடும் காற்றோசை என நேற்றிரவு நடந்த கச்சேரியின் கதாநாயகி இன்று மென்னடையில் காலாற நடந்து செல்கிறாள். சிற்றசைவுடன் நிதானமான நகர்வு. தெளிவான நீரோடை. ஒரு வெள்ளைக் கொக்கு நீரில் அடிமேல் அடி வைத்து நடந்துகொண்டிருந்தது, கால்வாய் நீரின் ஓட்டத்தை எவ்விதத்திலும் கலைத்துவிடாமல். அதன் கால்கள் நிலத்தைத் தொடும் இடம் தெரிகிறது. உடல் கனம் முழுதையும் எப்படிக் கால்களுக்குக் கொண்டு வராமல் அவற்றால் நடக்க முடிகிறது. என் கால்களும் கொக்குகளின் கால்களைப் போலாகிவிட்டிருந்தன. நிலத்தில் தடம் பதிக்காமல், சத்தமெழாமல், அதே சமயத்தில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தேன்.

சிலர் காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு அமைதியாக, சிலர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு. முழுதும் விடியாத காலையின் இருள் ஓர் அமைதியைத் தக்க வைத்திருந்தது. ஒளி சத்தங்களுக்குத் தைரியம் கொடுத்து வெளிக்கொணர்வது போல, இருள் அமைதிக்கு ஆதரவளித்து ஆக்கிரமிக்கச் செய்கிறது போலும். வாக்கிங், ஜாக்கிங், சைக்கிள் என நகர்வுகள் நகர்வுகள். நானும் நகர்கிறேன். என்னுடன் உலகமும் நகர்கிறது. ஒரு மீன்கொத்தியின் உச்சஸ்தாயிக் குரல் ஓங்கி ஒலித்தது. ஒரே இடைவெளியில் விட்டுவிட்டு அந்தச் சத்தம். குரல் வந்த வழி பார்த்தேன். அதே மொட்டை மரத்தின் உச்சிக்கிளையில் சூரிய ஒளியில் மின்னும் நீல நிறம். அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் அந்தக் கணம் கேட்கும் ஒற்றைக் குரலாக அதன் குரல். அந்தப் பகுதி முழுதும் தன் குரலால் இணைத்துவிடும் பிரயத்தனம் போல.

தூரத்துப் பறவையொலி போல் விசில் சத்தம் கேட்கிறது. இவர்தான் இரண்டாமவர். பாலத்தின் எதிர்ப்புறம் நடக்கிறார். விசிலடித்தபடியே நடப்பார். அவருக்குக் கண் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அவர் எதையும் பார்த்து நான் பார்த்ததில்லை. அவரது உலகில் விசிலும் பாட்டும் மட்டும்தான். சீனத்து இளையராஜா பாடலாக இருக்கும். வயதை வைத்துப் பார்த்தால் எம்.எஸ்.வியாக இருக்கவும் வாய்ப்புண்டு. உயரம் குறைவுதான் என்றாலும் நடையும் விசிலும் சிறு துள்ளலும் சந்திரபாபுவை நினைவூட்டும். அந்தக் காலை நடையில் பறவைகளின் ஒலியுடன் ஒத்திசைவாய் அந்த விசில் ஒலி கேட்கும். விசில் மூலம் அவர் பறவைகளுடன் பேசுகிறாரோ? உலகத்துடன்? என்னுடன்? விசிலும் காற்றொலி தானே? பேச்சைப் போல, பாட்டைப் போல, இவ்வுலகின் அனைத்து ஒலியையும் போல. அவரது விசில் மொழி எனக்குப் புரியவில்லை என்பது என் போதாமைதானே? அவரும் கொஞ்சம் எனக்காக மெனக்கெடலாமே. சின்ன பார்வை போதும், அவருலகில் என்னை இணைத்துக்கொண்ட திருப்தி கிட்டிவிடும் எனக்கு.

மூன்றாமவர், கிளி மனிதர். சைக்கிளை ஓட்டிச் சென்று பார்த்ததில்லை. உருட்டியபடி நடப்பார். மீனாட்சியின் கிளி போல, தோளில் ஒரு கிளி அமர்ந்திருக்கும். சுற்றிலும் உள்ள மரங்களில் இருந்து பலவிதமான கிளிச்சத்தங்கள் கேட்கையில் இதுவும் குரலெழுப்பும். அவர் சொல்லிக் கொடுத்த சீன மொழியில் பேசுகிறதா? கிளிகளின் பாஷையை இன்னும் மறக்காமலிருக்கிறதா? அந்தக் கிளிகளிடம் பேசுகிறதா, அவரிடம் பேசுகிறதா? எதுவும் தெரியவில்லை. அவர் தன் பாட்டுக்கு நடந்துகொண்டிருப்பார். கிட்டத்தட்ட 70 வயதிருக்கலாம். நடையில் நிதானமும், ஒரு தாளமும் இருக்கும். அவருக்கும் சுற்றுலகம் கிடையாது. தானும் சைக்கிளும் கிளியும் மட்டுமே. அவரது வலது கையில் இரண்டு வாட்சுகள் கட்டியிருப்பார், கிளிக்கு ஒன்று அவருக்கு ஒன்று என்பது போல. அவரிடம் பேச வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. கிளியைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். முடிந்தால் கிளியிடம் நட்பாகிக்கொள்ளலாம். அதற்கெல்லாம் அவர் மனது வைத்தால்தானே. அவரது கண்கள் இந்த உலகிலேயே இல்லையே. தூரத்தில் இருந்து என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார். அரையிருளில் கிளி கருப்பாகத் தெரிகிறது. உண்மையில் அது கிளியா? கிளியின் நிழலா? என்னை நெருங்கியதும் நொடியில் மறைந்துவிடுவார்கள். இன்று அவரிடம் மறித்துப் பேசினால் என்ன? கண்களை எப்படிச் சந்திப்பிற்கு இடமின்றி வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஒரு தற்காப்புக் கலைதான். இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே எனக்குத் தேவையான ஒன்று.

முதலாமவர் அசோக மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். நாய்களை வாக்கிங் கூட்டி வருபவர்கள் பொதுவாக ஒரு ப்ளாஸ்டிக் பையும் பேப்பரும் கையில் எடுத்து வருவார்கள். பொது இடங்களில் அதன் கழிவுகளை எடுத்து அப்புறப்படுத்துவதற்காக. ஆனால் அவர் கையில் பை இல்லை. தன் நாய் அதைச் செய்யாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். பின் ஏன் மரத்தடியில் நிற்கிறார்? நடையை மெதுவாக்கினேன். அவரைப் பார்த்துக்கொண்டே நடக்கலாம். இன்று அவரைக் குறித்துக் கூடுதலாகச் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். நேரடியாகப் பார்க்கமால் எப்படிப் பார்ப்பது? சிறுது தள்ளியே நின்றுகொண்டேன்.

பைனாகுலர் எடுத்து வந்திருந்தால் பறவைகளைப் பார்ப்பது போல் அங்கு சிறிது நேரம் நின்றிருக்கலாம். அந்தக் கால்வாய் நீரைப் பார்த்துக்கொண்டே நின்றேன். அங்கு எப்போதும் காணப்படும் உடும்பு ஒன்று வெகுதூரத்தில் இருந்து தண்ணீரில் நீந்தி வந்துகொண்டிருந்தது. உடும்பு என்றால் எனக்கு பயம். உடும்பு என்ன செய்யும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் உடும்புப் பிடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தாலே பயமுறுத்தும். முதலைகள் போன்ற தோலுடன், முதலைகள் போல் அல்லமால், வேகமாக அசையும் அவை எளிதில் நம்மை நெருங்கிவிடலாம் என்கிற பயமாக இருக்கலாம். சில சமயம் உடும்புகள் தண்ணீரில் இருந்து மேலேறி வந்து நடைபாதையில் நிற்பதையும் பார்த்திருக்கிறேன். பலரும் அலறுவார்கள். ஒரு நாள் அதன்மேல் ஒருவர் சைக்கிளை ஏற்றிவிட, அது துள்ளிப் பாய்ந்து தண்ணீருக்குள் விழுந்தது. கீழே விழுந்ததில் அவருக்குக் கை கால்கள் எல்லாம் சிராய்ப்பு. பார்க்கப் பார்க்க அதன் தடித்த தோல் ஒரு அச்சத்தைத் தருகிறது. 

உடும்பு முன்னும் பின்னுமாக ஒரே பகுதியில் நீந்திக்கொண்டிருந்தது. அவரை ஓரக் கண்ணால் பார்த்தேன். அவரது நாய் அசோக மரத்தைச் சுற்றி வருகிறது போலும். அவர் பார்வை நகர்ந்த விதம் கொண்டு கணித்தேன். அசோக மரம் முழுக்கப் பூக்கள். ஆரஞ்சு நிறத்தில் மின்னுகின்றன. காலை வெயில் ஏறிக் கொண்டிருந்தது. சூரியக்கீற்றுகள் தொட்டு அனைத்து ஜீவராசிகளும் உறக்கத்தில் இருந்து எழுகின்றன. இருளில் இதுவரை ஒளிந்திருந்த உலகம், நிறம் துலங்கி கண் திறக்கிறது. உடல் முழுக்க பூத்து நிற்கும் அசோக மரமும் எழுகிறது. வேர் முதல் மரத்தண்டு உட்பட எல்லா இடங்களிலும் பூக்கள். மரம் முழுக்கப் பூக்கள். கொத்துக் கொத்தாய். என்னையறியாமலேயே முழுதும் மரத்தின் பக்கம் திரும்பி பூக்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தேன். ஒரு மலருக்குள் பல மலர்கள். பல மலர்கள் சேர்ந்தது ஒரு மலர். அந்த மலர்கள் என்னைப் பார்ப்பது போலிருந்தது. அசோக வனத்தில் இவை சீதைக்கு ஆறுதல் தந்திருக்குமா? அவற்றிடம் உரையாடலைத் தொடங்க நினைத்தேன். அவர் என்னைக் கவனிப்பது தெரிகிறது. அவரது உடல்மொழி மாறுகிறது. இறுக்கமாகிறது. அவர் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அவர் யாரையும் பார்க்கத் தயாராக இல்லை, அந்த நாயைத் தவிர. 

நாய் சங்கிலியை மரத்தின் பக்கம் இழுக்கிறது போலும். அவர் தன் பக்கம் அதை இழுக்கிறார். அது வர மறுக்கிறது. அதனுடன் பேசுகிறார், தாஜா செய்து அழைத்துப் போகப் போவதைப் போல. கிடைத்த சமயத்தில் அவர் முகத்தைப் பார்த்துவிட்டேன். தாடையில் மட்டும் வெள்ளைநிறக் குறுந்தாடி, கழுத்தைத் தாண்டி நெஞ்சு வரை நீண்டிருந்தது. வெள்ளை மீசை, புருவங்கள். கையில் சீன எழுத்துகளில் பச்சை குத்தியிருந்தார். சில குறியீடுகளும் உருவங்களும்கூடத் தெரிந்தன. கிழமரங்களின் பட்டைகளைப் போல அழுத்தமான வரிகளுடன் உலர்ந்து இறுக்கமாக இருந்தது முகம். உதடுகள் இறுக்கித் தைத்திருப்பதைப் போலிருந்தன. அவரது உடலின் வாசலான அது பூட்டப்பட்டுப் பல்லாண்டு ஆன தோற்றத்துடன் இருந்தது. 

அவர் நாயை அதன் போக்கில் கொஞ்ச நேரம் விட்டுவிட்டுப் பின்னர் அழைத்துப் போகலாம் என்று முடிவெடுத்துவிட்டதைப் போல் மரத்தையே பார்த்தபடி நின்றார். நானும் இன்று நாயுடன்தான் கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 

விசிலொலி எதிர்ப்பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. எதிர்ப்புறம் நின்று பார்த்தாலும், தூரமாக இருந்தாலும், ஒருவர் உற்று நம்மைக் கவனிக்கிறார் என்றால் ஒரு குறுகுறுப்பு வரும்தானே? அந்தக் குறுகுறுப்பை அவரிடம் எப்படியும் இன்று உண்டாக்கி என்னைப் பார்க்க வைக்க வேண்டும். அவரையே உற்றுப் பார்த்தேன். ஒரு பாடலை முடித்து இன்னொரு பாடலுக்குப் போகிறார், நடந்துகொண்டே. 

திடீரென்று அம்மாவும் மகனுமாக இருவர் சைக்கிளில் வந்தனர். ஐரோப்பியர் போல் தெரிந்தார்கள். சைக்கிளை அருகில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கால்வாய்ப் பக்கம் வேகமாகத் திரும்பினார்கள். இப்போது அங்கு இரண்டு உடும்புகள் ஒன்றை ஒன்று கட்டியணைத்துக்கொண்டு நின்றன, மல்யுத்தம் போல. அந்தச் சிறுவனுக்குத் தான் காணும் காட்சியில் ஆச்சரிய உணர்வைவிட மேலோங்கி இருந்தது அறிந்துகொள்ளும் ஆர்வம்தான். உடும்புகள் பக்கம், அம்மா பக்கம் எனத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பல கேள்விகள். why, what, is it, when, how என்ற ஆரம்பக் கேள்விச் சொற்கள் மட்டும்தான் என் காதில் தெளிவாக விழுந்தன. கேள்விகளுக்கு நடுவில் இடைவெளி இருந்தாற்போல் இல்லை. தன் கேள்விகள் அனைத்தையும் தன்னுள் இருந்து இறைத்துக் கொட்டிவிடும் அவசரம்தான் இருந்தது. சிறுது நிறுத்தினாலும் கேள்விகள் சுரப்பது நின்றுவிடுமோ என்கிற பயம். அல்லது கேட்க ஆளில்லாமல் போய்விடுமோ என்கிற பதற்றம். உண்மைதான். பதில்கள் வரும்வரை கேள்விகள்தானே பிரதானம், பல சந்தர்ப்பங்களில் பதில்களுக்குப் பின்னும்கூட. கேள்விகள் தனித்த உயிரி. பதில்களை ஒட்டி மட்டுமில்லை அதன் வாழ்வு. எனக்கும் பல கேள்விகள் உண்டு. தினமும் இன்றைய பிரதான கேள்வி என்று ஏதேனும் ஒன்று வந்து சேரும். இன்றைய நடை இப்படி நிற்றலில் முடிந்திருப்பதும் கேள்வியால்தானே? அவன் கேள்விகளுக்கு நடுநடுவே சில சிறிய பதில்களும் அம்மாவிடம் இருந்து வந்தன. பல கேள்வி பதில்களுக்குப் பிறகு ‘I don’t know whether they are fighting or mating’ என்று அம்மா சொல்வது கேட்டது. ‘மேட்டிங்’ பற்றி முன்பே அவனுடன் பேசியிருப்பது போலிருந்தது அவள் சொன்ன தொனி. அவன் அமைதியானது போலில்லை. அவன் தன் கேள்விக்கிணற்றில் மேலும் ஆழத்திற்குச் சென்று கேள்விகளை இறைக்கத் தொடங்கினான். இப்போது கேள்விகள் குரலாக மட்டுமே அம்மாவிடம் வருகின்றன. அவனது கண்கள் இம்மியும் உடும்புகளை விட்டு நகரவில்லை. 

கால்வாயின் எதிர்ப்புறம் சீனமொழியில் அதே உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுமிக்கு அப்பா பதில் சொல்கிறார். அவள் கண்கள் விரிய கேட்டுக்கொண்டிருக்கிறாள். திடீரென்று அதைச் சண்டை என்றே முடிவெடுத்துவிட்டதுபோல ‘ஃபைட்! ஃபைட்!’ என்று கத்திக்கொண்டிருக்கிறாள். அப்பா அவளை அமைதியாக இருக்கும்படி சொல்கிறார். அவள் கேட்டபாடில்லை. அவளது உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. ‘ஃபைட்! ஃபைட்!’ என்றோ ‘மேட்! மேட்!’ என்றோ கத்த வேண்டும் போலிருந்தது. விசில் சத்தம் எப்போது நின்றது என்று தெரியவில்லை. நாயும் அவருமாக எப்போது உடும்புகள் பக்கம் திரும்பினார்கள் என்றும் தெரியவில்லை. கிளியுடன் அவரும் எப்போது என்னருகில் வந்து நின்றார் என்பதுவும் தெரியவில்லை. மேலும் சிலரும் கால்வாயின் இருபுறமும் நின்று வேடிக்கை பார்த்தார்கள். உடும்புகளிடம் எந்த அசைவும் இல்லை. தம் ஏகாந்தத்தில் இருக்கின்றன. சுற்றுப்புறம் எதுவும் அவற்றைப் பாதிக்கவில்லை. 

ஒரே வீரியத்துடன் இருளும் ஒளியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. ஒவ்வொரு சந்திப்பிலும் என்னவோ பரிமாற்றங்கள் நடக்கிறது என்பது உறுதி. இருளின் ரகசியங்கள் தெரிந்துகொண்டேதான் ஒளி ஒன்றுமே இல்லை என்பதுபோல் பளீரிடுகிறதா? வானம் நொடிக்கொரு நிறமெடுத்தது. மஞ்சள், சிவப்பு என நிறங்கள் மாறிக்கொண்டே இருந்தன. உதயமா, அஸ்தமனமா என்ற குழப்பத்தைத் தந்தது.

வால் பகுதி மட்டுமே நீரில் இருக்க முழுக்க எழுந்திருந்த உடலுடன் இரண்டு உடும்புகள் கட்டிக்கொண்டு நின்றன. வால்கள் லேசாகத் தண்ணீரில் அசைகின்றன. ஆரத் தழுவி நிற்கின்றனவா? பிடித்து வைத்திருக்கின்றவா தெரியவில்லை. கைகள் உடலை முழுக்க இறுக்கிப் பிடித்திருந்தன. அசைவின்றி ஒரே சிலை போல் நின்றன. அவ்வப்போது சிறு அசைவுகள். மீண்டும் அதே சிலைத் தோற்றம். நான் அந்த மூவரையும் பார்த்தேன். கண்களை உடும்புகளில் ஊன்றியிருந்தார்கள். கிளியும் அமைதியாக இருந்தது.

திடீரென ஒரு உடும்பு இன்னொன்றைக் கீழே தள்ளி அதன் மேலேறிப் படர்ந்தது. கீழே கிடந்த உடும்பு எதிர்ப்பது போல் எழ முயற்சி செய்தது. ஆனால் மேல் உடும்பின் உடல் முழுதும் அதன்மேல் கொடுத்த அழுத்தத்தில் நகர முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ் உடும்பு அசைவுகளைத் துறந்தது. இரண்டும் அசைவின்றி சிலையாகின. ஒன்றன் மேல் ஒன்று படுத்திருக்கும் சிலைகள். அப்படியே சில நிமிடங்கள். அனைவரும் அசைவின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெற்றி! என்று சிறுமி கை தட்டி குதூகலிக்கிறாள். அவளது அப்பா அவள் கையைப் பிடித்து நிறுத்துகிறார். மீண்டும் அமைதி. சிறுவன் கூர்ந்து கவனிக்கிறான். அம்மா அவன் தோளில் கை போடுகிறாள். 

இருள் தன் இறுதி மூச்சை இழுத்து, ஒளிக்கு வழி விட்டது.

அமைதியைக் கலைத்து, சலனத்தைத் தூவும் சத்தம் சற்று தூரத்தில் கேட்டது. அனைவரது பார்வையும் அந்தத் திசைக்குப் போயின. நான்கைந்து நீர்நாய்கள் நீரின் ஓட்டத்தைக் குலைத்தபடி வேகமாக நீந்தியும் ஓடியும் வந்தன. நீர் விலகி கரையோரங்களில் ஒதுங்கியது. கனத்த உடம்புகளில் இருந்து தெறித்து விழும் துளிகள் சூரிய ஒளியில் நீர்க்குமிழிகள் போலிருந்தன. வழவழப்பான அவற்றின் தோல்களில் நீர் பசையாக ஒட்டியிருந்தது. நீரைக் கிழித்துக்கொண்டு பெரும் பாய்ச்சலாய் அவை ஊடுறுவுகின்றன. நீரின் சத்தமா நீர்நாய்களின் அசைவுச் சத்தமா? இரண்டும் உரசி ஒன்றாகிப்போன சத்தம். 

அந்த சலசலப்பிற்கு இடையே ஒரு க்ளக்! கனம் நிதானமாக நீரில் விழும் சத்தம். உடும்புகள் பிரிந்து நீருக்குள் ஓடின, ஒன்றை ஒன்று துரத்தியபடி. நீர் நாய்கள் கலைத்துப்போட்ட நீரில் இப்போது எதுவுமே தெரியவில்லை. கலங்கலாக சலசலப்புடன் ஒரே இடத்தில் குதித்தபடி இருக்கிறது நீர். வெகு அருகில் நாய் ஒன்று பெருங்குரலெடுத்துக் குரைக்கும் சத்தம் கேட்டது. நான் தன்னிச்சையாக அவர் பக்கம் பார்த்தேன். அவரும் சங்கிலியைப் பிடித்து இழுத்தபடி, அதனை அதட்டினார். கிளியும் விசிலும்கூட நாயைப் பார்த்தன. மூவரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒரே நேரத்தில் ஒற்றைப் பார்வையென மூவரும் என்னைப் பார்த்தனர். நானும் மூவரையும் ஒன்றாகப் பார்த்தேன். மூவர் நால்வரானோம். இப்போது அங்கு வேறு யாருமே இல்லை, மீன்கொத்தியின் உச்சஸ்தாயிக் குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மேலெழும் சூரியனை மேகமொன்று வேகமாக நகர்ந்து சென்று மறைத்தது. 

***

தமிழ்வெளி – அக்டோபர் 2024

Leave a Reply

%d bloggers like this: