வால் பற்றித் தொடரும் களிறுகள்

மனத்தின் கனமனைத்தையும்
எழுத்துகளில் இறக்கிவிட்டேன்
ஒவ்வொரு சொல்லிலும் அது
கசிந்து பரவத் தொடங்குகிறதை
இப்போது ஆசுவாசமாக வேடிக்கை பார்க்க முடிகிறது

அதிகப்படி அர்த்தமேறிய ஒவ்வொன்றும்
சுமைகூடி உடைந்துவிடும் அபாயத்தில்
தள்ளாடுகின்றன

நகர்வின் அசைவில் சுமை அழுத்தம்
குறைத்துவிட ஒன்றன் பின் ஒன்றாக
வால் பற்றித் தொடரும் களிறுகளாய்
அசையத் தொடங்குகின்றன

சிற்றசைவு ஒவ்வொன்றிலும் அலங்காரங்கள் துறந்து
அப்பாடா என்று லேசாகி மூச்சுவிட்டு
மறுமூச்சு உள்ளிழுக்கும்போதே
இருமடங்காகிப் போய்விடுகிறது எடை

சொற்களாகிவிட மறுக்கும் சில எழுத்துகள்
முன் பின்னான எழுத்துகளை விலக்கியபடியே
இடைவெளியை உருவாக்கி நகர
சட்டென்று நிலை தடுமாறி
சரியத் தொடங்குகின்றன

அவசரமாக ஒரு முற்றுப்புள்ளியை
அழுத்தம் திருத்தமாக வைத்துவிட்டுப்
பக்கங்களை மூடிவிட்டேன்
இனி தப்பித்தல் சாத்தியமில்லை.


நன்றி : அரூ மின்னிதழ்(ஜனவரி 2020)

Leave a Reply

%d bloggers like this: