காத்திருப்பு

‘சைனீஸ் கார்டன்’ அறிவிப்பைத் தொடர்ந்து எம்ஆர்டியில் இருந்து இறங்கியதுமே ஏதோவோர் அமானுஷ்ய அமைதி. முதல் தளத்தில் இருந்தபடியே கார்டன் இருக்கும் திசையில் பார்த்தாள். ஹோவென்ற பெருவெளி விழுங்கிவிடுவதைப் போல் கைகளை அகல விரித்துக் கிடந்தது. ராட்சதப் பறவையொன்றை உத்தரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பதைப் போல் தலைக்கு மேலிருக்கும் பெரிய மின்விசிறி அசைந்து கொண்டிருந்தது.  அந்தி சாய்வதற்குள் இன்றைய வெம்மைக் கணக்கை முடித்துவிடும் வீரியத்துடன் சுட்டெரிக்கும் வெயில், மாலை ஐந்தரை மணி. படிக்கட்டில் இறங்கும்போது ஒவ்வொரு படிக்கும் சத்தம் கூடிக்கொண்டே போனது. பேரமைதியில் இருந்து பேரிரைச்சலுக்குள் புகுவது போன்ற உணர்வு. டிக்கெட் காட்டி வெளியேறுமிடத்திற்கு அருகில் கூட்டம் குறைவான ஓரிடமாகப் பார்த்து ஒதுங்கினாள்.

‘வந்துவிட்டேன், காத்திருக்கிறேன்’ ரகுவிற்கு மெசேஜ் அனுப்பினாள். ஆன்லைன் என்று காட்டியது. ஆனால் பதில் எதுவும் வரவில்லை. ஒருவேளை நெருங்கிக் கொண்டிருக்கலாம். போனை அணைத்துக் கைப்பைக்குள் போட்டாள். அவன் எந்நேரமும் அழைக்கலாம் அல்லது மெசேஜ் அனுப்பலாம், கையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் கைப்பையைத் திறந்தாள். அவ்வப்போது பாதாளச் சுரங்கமாய் மாய்மாலம் காட்டும் அந்தச் சிறிய கைப்பைக்குள் கிடக்கும் பல பொருட்கள் அவள் கைகளில் தட்டுப்பட்டு போன் மட்டும் கண்ணாமூச்சி விளையாடியது. இப்போதுதானே உள்ளே வைத்தேன், எங்கு போயிருக்கும்? யாரோ லேசாக இடதுபுறத் தோளில் இடித்துவிட்டுப் போனார்கள். அனிச்சையாகத் திரும்பினாள். உரசிச் சென்றவன் நான்கு அடி முன் சென்று நின்று அவளைப் பார்த்தான். அவள் பார்க்கும்போது தலை குனிந்தவாறே தன் மொபைலைப் பார்த்தான். எங்கோ பயணப்படக் காத்திருப்பவன் போல் முதுகில் பெரிய பை. அவன் அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இடித்தது அவன்தானா என்பதே இப்போது அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

திடுமென ஒரு பெருங்கூட்டம் கூடியது. அடுத்த எம்ஆர்டி வந்திருக்க வேண்டும். பார்வைக்கெட்டிய தூரம் என்பது கைக்கெட்டும் தூரமென்றாகிவிட்ட நெரிசல். இதற்கிடையில் கைக்குள் அகப்பட்டுவிட்டது போன். எடுத்துப் பார்த்தாள், ரகு ஜூராங் ஈஸ்ட் வந்துவிட்டதை மிகவும் மகிழ்ச்சியோடு அறிவித்திருந்தான். இன்னும் 12 நிமிடங்கள் என்று ஸ்மைலி வேறு. ஏற்கனவே 20 நிமிடம் லேட். இன்னும் 20 நிமிடமாகலாம். கூகிள் மேப் காட்டும் நொடித்துளிகளே இவனுக்கு வேதவாக்கு! சட்டென்று ஓர் எரிச்சல் மேலெழும்பியது. தோள் உரசும்படி வெகு அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தாள். அத்தனை அருகில் ஓர் அந்நியக் குரல் கேட்பதே திடுக்கென்றிருந்தது.

‘மேடம், தமிழா?’

இந்த ஊரில் பெரும்பாலும் அந்நியர்களின் முதல் வாசகம் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் ‘ஆமா’ என்றபடியே யாரென்று பார்த்தாள். அவன் ஒருவிதத் தயக்கத்துடன் நெளிந்துகொண்டே ‘ரேட் எவ்வளவு?’ என்றான். எதன் ரேட் கேட்கிறான், அவன் கேட்பது என்னவென்று அவளுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. எதைக் கேட்கிறான் என்றபடி யோசிக்கத் தொடங்கி, அந்தச் சிந்தனைப் பயணத்தின் பாதையிலேயே குபுக்கென்று வியர்க்கத் தொடங்கியிருந்தது. மின்னலோ, இடியோ, வாடைக்காற்றோ எந்த முகாந்திரமும் இன்றி அடைமழை பொழிந்தாற்போல் வியர்வை பெருகியிருந்தது. ஒருவாறு அவன் கேட்டதன் பொருள் விளங்கிக் கொள்வதற்குள் முகம் முழுதும் நனைந்துவிட்டது. வெள்ளை குர்தா முதுகோடு ஒட்டிக் கொண்டது. பெருகி வழியும் வியர்வையைத் துடைக்க முயலும்போதுதான் உடல் நடுக்கத்தை உணர்ந்தாள். கேட்கப்பட்டது கேள்வி என்றும் அதன் பதிலுக்கான காத்திருப்பும் உறைத்தது. என்ன பதில் சொல்வது? கோபமும் எரிச்சலுமாக வசைகளை வாய்க்குள் அரைத்துக்கொண்டே, அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில் திரும்பி நின்றுகொண்டாள்.

அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். உடலை நெளித்துக் கால்களைச் சற்றே தூக்கி வெறுமனே காற்றில் அசைத்து இரு கால்களையும் மாற்றி மாற்றி நடப்பது போன்ற அசைவை ஓரிடத்தில் நின்றபடியே செய்து கொண்டிருந்தான். கல்லூரியில் படிக்கும்போது தன்னிடம் வந்து காதலைச் சொன்ன வகுப்புத்தோழனின் நினைவு வந்தது. அவன் கையில் கடிதம் இருந்தது, இவன் வெறுங்கையைப் பிசைந்துகொண்டு.

எப்படி என்னைப் பார்த்து இப்படிக் கேட்கத் தோன்றியது அவனுக்கு. தன்னையே ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்துக் கொள்ள நினைத்தாள். உடையைச் சரிசெய்யத் தொடங்கின அவளது கைகள். வெள்ளை நிற முழங்காலுக்குக் கீழ் வரை நீளும் குர்தா, வெளிர் நீல நிற ஜீன்ஸ், கழுத்தைச் சுற்றி ஒரு சால்வை. வீட்டிலிருந்து கிளம்புகையில் அவசரமாக கண்ணாடி பார்த்தபோது தென்பட்ட தன்னுருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்தாள். அழகாக, நாகரிகமாக இருப்பதாகத்தான் அப்போதும் நினைத்தாள், இப்போதும் நினைக்கிறாள். முன்நெற்றியில் துருத்தியபடி இருந்த நரைமுடியை அழுத்திச் சீவியதும் நினைவுக்கு வந்தது. எந்தவொரு வேண்டத்தகாத நிகழ்வுக்கும், தான் ஏதேனும் ஒரு வகையில் காரணமோ என்ற குற்றவுணர்வை முதலில் கீறி இரத்தம் வடியச் செய்யும் அவளது மனம் இப்போதும் குடையத் தொடங்கியது. லிப்ஸ்டிக் அடர்நிறமோ! இல்லையே, இன்றைய அவசரத்தில் லிப்ஸ்டிக் போடாமல் வெளியேறி, லிப்டில் ஏறியதும் தடவியது நிறமற்ற லிப்க்ளாஸ் மட்டும்தானே. வெள்ளைக் குர்தா என்பதால் ப்ரா மற்றும் ஸ்லிப்கூட அதே நிறத்தில்தான் அணிந்திருந்தாள். அதையும் மீறி ஏதாவது? யாரும் பார்க்காதபடி இயல்பாக உடையைச் சரி செய்து கொள்ளும் பாவனையில் எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள்.

அவன் அருகில் இருந்த டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் போய் நின்று வேடிக்கை பார்ப்பதைப் போல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சுற்றில் அவளும் இருக்கிறாள் என்பதுபோன்ற பாவனை இருந்தாலும் அவளைச் சுற்றியே அந்தச் சுற்று என்பது அவளுக்குப் புரியாமலில்லை. பதிலை எதிர்பார்க்கிறானாம். அவனைச் சுட்டெரிப்பதுபோல் பார்ப்பதாக எண்ணி முடிந்த மட்டும் கோபத்தை உச்சியிலேற்றி முறைத்தாள். அது அவனைச் சுட்டதைப் போலொன்றும் தெரியவில்லை. பதிலுக்குக் காத்திருக்கும் பதட்டம் மட்டும்தான் தெரிகிறது.

அவனிடம் இருந்து பார்வையை எடுத்து எங்கே விடுவது என்ற குழப்பம். அவனைப் போலவே சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள். கூட்டம் இரைச்சலுடன் நின்றிருந்தது. கூட்டம் என்றாலும் அது மொத்தமாக ஒரு கூட்டம் இல்லை. பல குழுக்களாகப் பிரிந்து நின்றனர். ஆனால் குழுக்களுக்குள்ளும் இடைவெளி மிகவும் குறைவு. இவற்றையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஸ்கேன் செய்தாற்போல் பார்த்துவிட்டுத் தலை குனிந்தாள். இதுபோன்ற இடத்தில் நிற்பதே தான் செய்யும் தவறு என்று உறுத்தத் தொடங்கியது. அத்தனை கோபமும் ரகுவின் பக்கம் திரும்பியது. இந்த இடத்திற்கா வரச் சொல்ல வேண்டும் அவன்? கூகிள் பரிந்துரைத்த இடம் என்று அவன் சொன்னது நினைவுக்கு வர, கூகிள் இங்கு நடப்பன யாவும் அறியுமா என்ன?

வியர்வையும் நடுக்கமும் குறைந்தபாடில்லை. அவளைக் கடந்து யார் சென்றாலும் தன்னை உரசிச் செல்வதுபோலவே இருந்தது. இதெல்லாம் சினிமாவில் பார்த்ததுதான். ‘அந்த’ மாதிரி ஆளாக இருந்தால் ரேட் பேசிக் கிளம்பிவிடுவார்கள். நல்ல குடும்பத்துப் பெண்கள் என்றால் ‘அக்கா தங்கையோடு பிறக்கவில்லை?’ என்றோ, மிகவும் மோசமான வசை வார்த்தைகளையோ கொட்டுவார்கள். தான் இதில் எதையும் செய்யாமல் விட்டதை நினைத்து அவளுக்கு வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது. இப்போதுகூடப் போய் அவனிடம் நான்கு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிடலாம்தான். ஆனால் வார்த்தைகளுக்குச் சற்றும் பொருந்தாத தன் உடல் நடுக்கம் அனைத்தையும் அபத்தமாக்கிவிடக் கூடும். சினத்தைத் தன் ஆளுகைக்குள்ளே வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் வியர்வையை அடைக்க வேண்டும். இல்லையென்றால் குளித்தாற்போல் அவள் உடை முழுதும் நனைந்துவிடும். அதுவே மேலும் சிலரைத் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடும்.

எம்ஆர்டியைவிட்டு வெளியேறி சைனீஸ் கார்டன் உள்ளே சென்று ஓரிடத்தில் நின்றுகொள்ளலாம். ரகு வந்ததும் எப்படியும் உள்ளே போவதாகத்தானே திட்டம். போனில் பேசிக்கொண்டே நடந்தால் யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை. ரகுவுக்கு அழைத்தாள். அவன் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

வேறு வழியின்றி யாரையும் பார்க்காமல் தலை கவிழ்ந்தபடி நடக்கத் தொடங்கினாள். இயல்பான நடையாகத் தெரிந்தாலும் நொடியும் தவறவிடக்கூடாத, அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாள். தலை கவிழ்ந்தபடியே சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். அருகே யாராவது வருவதுபோல் தோன்றினாலே உடல் விறைப்பாய் நிமிர்ந்து இறுகுவதும் மனம் படபடவென்று அடித்துக் கொள்வதுமாகப் பெரும் அவஸ்தையாக இருந்தது. மனதுக்கு முரண்பட்டு உடலை நிமிர்த்தி நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.

திரும்பிப் பார்த்தபோது அங்கிருந்த ஒரு சிறுபெட்டிக்கடையை ஒட்டி அவன் நின்றிருப்பது தெரிந்தது. இப்போது அழுக்கேறிய ஷூக்களை வைத்தே அவனை அடையாளம் காண முடிந்தது. அவனை நோக்கி ஒரு பெண் வந்து நின்றாள், இருவரும் பேசத் தொடங்கினர்.

ஏனோ அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்கிற குறுகுறுப்பும் ஆவலும் எழுந்ததது. தலையைச் சிறிது பக்கவாட்டில் திருப்பி அவளைப் பார்த்தாள். அவள் வெளிர் மஞ்சள் நிற டிசர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தபடி தலையை ஆட்டிப் பேசுவது தெரிந்தது. பேச்சுக்குத் தக்கபடி விரித்துக் கிடந்த, இடுப்பு வரை நீண்ட கூந்தல் அசைவதைப் பார்க்க அழகாக இருந்தது. தலைவிரிகோலம் என்று அம்மா வசைபாடும் கோலத்திற்குச் சற்று முந்தையது. பள்ளிக் காலத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த பாரதியின் பாஞ்சாலி சபதம் நினைவுக்கு வந்தது.

‘மேவி இரண்டுங்கலந்து குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன்யான், இது

செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்’

மனதிற்குள் தமிழாசிரியர் மீனாவின் கம்பீரக் குரலில் பாடல் ஒலித்தது. கூடவே விஜய் டிவி மகாபாரதத்தில் வரும் அம்பையும் திரெளபதியும் தியாவின் நினைவில் வந்தார்கள். திரெளபதியைவிட அம்பைக்கு அக்னி உமிழும் கண்களும், செந்நிற ஆடையும் விரிசடையும் பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றும். இவ்வளவு நீளக் கூந்தலை விரித்துப் போட்டால் சிரமமாக இருக்காதா? கண்ணுக்குத் தெரியாத சிறிய க்ளிப் இரண்டு பக்கமும் போட்டிருப்பாளாயிருக்கும். அந்தப் பெண்ணின் முகம் தெரியவில்லை. நிச்சயம் இந்தியராகத்தான் இருக்க வேண்டும். நீளக் கூந்தல் மட்டுமல்ல, தமிழா என்று தன்னிடம் கேட்டதை வைத்து தமிழ்ப்பெண், குறைந்தது இந்தியப் பெண்ணைத்தான் அவன் எதிர்பார்த்திருப்பான் என்பது நிச்சயம். என்ன காரணமாக இருக்கும்? மொழி தெரிந்தால் கூடுதல் சுவாரசியமோ, அல்லது ரேட் குறைவாக இருக்குமா?

சைனீஸ் கார்டன் போகும் வழியில் நடந்துகொண்டிருந்தாள். இங்கும் கூட்டம்தான் என்றாலும் ஓரளவுக்கு இடைவெளி இருந்தது. பேச்சொலியில் கவனம் செலுத்த நினைத்துக் காது கொடுத்த அவளுக்கு அத்தனை பேச்சுக்குரலும் கலந்து ஒற்றைப் பேரிரைச்சலாகத்தான் ஒலித்தது. ஒரு குரலையும் ஒரு வார்த்தையையும் தனியாகப் பிரித்தெடுத்துவிட முடியவில்லை. அருகில் நடப்பவர்கள் பேசுவதுகூடக் கூட்டத்துடன் கலந்து ஒன்றாகி, அதன் பின்னரே தன் காதுக்கு வந்து சேரும் அதிசயம்.

நடைபாதைக்கு இடதுபுறம் இருந்த புல்வெளியைக் கண்டதும் மனவேகத்திற்குக் கால்கள் ஈடுகொடுக்கவில்லை என்பது புரிந்தது. வேகத்தைக் கூட்டலாமா? ஏன்? என்ன நடந்துவிடப் போகிறது? யாரும் கையைப் பிடித்து இழுத்துவிடுவார்களா என்ன! நிதானமாகச் சுற்றிலும் பார்க்கும்போது எங்கும் எந்த அசம்பாவிதமும் நடப்பதாகத் தெரியவில்லை. யாரும் யார் கையையும் பிடித்திழுக்கவில்லை, உண்மையில் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டோ கட்டிப் பிடித்துக்கொண்டோகூட யாரும் இல்லை. தன் தலை நிமிர்ந்திருப்பதை அறிந்த அவளுக்குச் சிறிதாகப் புன்னகையும் வந்தது. ரகு வரும்வரை அங்கேயே நிற்கலாம் என்று முடிவெடுத்தாள்.

புல்வெளியில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். நேற்று மதியம் பெய்த மழை ஈரத்தின் மிச்சம் புல்வெளியில் இன்னமும் ஒட்டியிருப்பதைத் தனது செருப்புகளையும் மீறி கால்களில் உணர்ந்தாள். இந்த ஈரத்திலுமா கிரிக்கெட்! மொட்டைமாடியில் தம்பியும் அவன் நண்பர்களும் கிரிக்கெட் விளையாடியது நினைவுக்கு வந்தது. அந்தச் சிறிய இடத்தில் நான்கு பேர் விளையாடுவார்கள். 20 மீட்டர் நிலப்பரப்பும் 30க்கும் மேற்பட்டவர்களுமாக நிகழும் ஒரு பிரம்மாண்டத்தைச் சுருக்கி அவரவர் வசதிக்கேற்றபடி விதிமுறைகளை வளைத்துக்கொள்வார்கள். எல்லைகளும் விதிகளும் விளையாட்டை நிர்ணயிப்பதில்லை, விளையாட்டு என்னும் செயல் தரும் உணர்வுதான் அங்கு முக்கியமாகிறது. ‘டொக்!’ சத்தத்தைத் தொடர்ந்து பந்து மேலேறி அவளை நோக்கி வருகிறது. பந்தைப் பார்த்துக்கொண்டே அதன் வேகத்திற்கு இணையாக ஒருவன் ஓடி வருகிறான். பந்திருக்கும் பக்கம் லேசாகச் சரிந்து ஒற்றைக் கையால் பிடித்து அதே வேகத்தில் திரும்பி விளையாடுபவர்களை நோக்கி எறிகிறான். பந்து அவன் கையில் இருந்த நொடிக்கும் குறைவான நேரத்தில் அனைவரும் கூச்சலாய்க் கத்தத் தொடங்கியிருந்தனர். அந்தக் கூச்சல் இப்போது மேலும் கூடி இருந்தது. முகம் மலர அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அந்தப் புன்னகை அந்த விளையாட்டோடு போய்ச் சேர்ந்திருக்கும் என்று சொல்லியவாறே, எம்ஆர்டியில் இருந்து அவள் வந்த பாதையை நோக்கித் திரும்பி நின்றுகொள்கிறாள். வியர்வை சுரப்பது நின்றிருக்கிறது. உடலில் ஒட்டியிருக்கும் வியர்வை காற்றில் பட்டுச் சில்லென்ற உணர்வைத் தருகிறது.

அதே கூட்டம்தான். எம்ஆர்டி ஸ்டேஷனுக்குள் நின்றபோது இருந்த மூச்சடைப்பும் பதட்டமும் குறைந்து இப்போது நிதானமாகப் பார்க்க முடிகிறது. எம்ஆர்டி விட்டு வெளியே வரும் இடத்தில் உள்ள ஓரிரு படிகளில் சிலர் உட்கார்ந்திருக்கின்றனர். அநேகமாக ஆண் பெண் ஜோடிகள், சில ஆண்களும் பெண்களுமான குழுக்கள். கையோடு உணவு கொண்டு வந்திருக்கின்றனர் சிலர். பெரும்பாலும் மாலைக்கேற்றவாறு ஏதேனும் பானங்கள் அல்லது சிற்றுண்டிகள். ஒருவர் முகமும் தியாவுக்குத்  தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. கூர்ந்து கேட்டபோது சில வார்த்தைகள்கூடக் காதில் விழுகின்றன பல மொழிகளில் கலவையாக. அவற்றைப் பிரித்துப் பொருள் கொள்வதைவிட அவர்களின் உடல்மொழி அவளை ஈர்க்கிறது. ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

ஏனோ ஆண்களைவிடப் பெண்களைக் கவனிப்பது அவளுக்குக் கூடுதல் சுவாரசியமாக இருக்கிறது. இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஒரு குழு. ஒரு பெண் தரையில் உட்கார்ந்தபடித் தன் கால்களை நீட்டிப் பின்னிக்கொண்டு ஆட்டியவாறு அருகில் இருக்கும் இன்னொரு பெண் கொடுக்கும் கேன் டிரிங்கை வாங்கி வாயில் சரிக்கிறாள். அது வழிந்து அவளது உடையிலும் சிதறுகிறது. அதைத் துடைக்கவோ உடையில் வழிந்ததற்குப் பதட்டப்படவோ இல்லை. ஒருவர் போனில் எதையோ காட்ட, நால்வரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். அருகில் இருப்பவள் இப்போது அவளது மடியில் சாய்ந்து படுக்கிறாள். அவளது குட்டைப் பாவாடை மேலேறி இருந்ததால் சரியாக அவளது தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறாள்.

அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஜோடி. தரையில் செய்தித்தாளை வைத்து ஆண் தட்டுகிறான். கட்டெறும்புகளாக இருக்கும். பெண் தன் காலணிகளைக் கழற்றி கால்களில் ஏறிவிட்ட எறும்புகளைத் தட்டிவிடுகிறாள். புல்வெளியில் பிளாஸ்டிக் பைகளை விரித்து அதன்மேல் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள், சிலர் போன் பேசிக்கொண்டு, யாரும் தனியாக இல்லை, சும்மாவும் இல்லை. தனியாக நின்றிருப்பது அங்கிருக்கும் மரங்கள் மட்டும்தான். தியா நிற்கும் இடத்தில் இருந்து பார்க்க சிதறினாற்போல் மனிதர்கள் கூட்டம், அவர்களுக்குப் பின்னால் கைகளைப் பிளந்தாற்போல் கிளைகளை விரித்திருப்பதில் ஒரு நேர்த்தியுடன் சரியான இடைவெளியில் சில மரங்கள், அதற்கும் பின்னால் கூடாரம் போன்றிருக்கும் எம்ஆர்டி ஸ்டேஷன் என உயரத்திற்குத் தகுந்தாற்போல் புகைப்படம் எடுக்க அடுக்கடுக்காய் நிற்க வைத்ததுபோல் தெரிகிறது.

போனை எடுத்துப் பார்க்கிறாள், ரகுவிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை. மறுபடியும் போன் செய்து பார்க்கலாமா என்று யோசிக்கும்போது ஒரு பெண் அவளுக்கு அருகில் வந்து நிற்கிறாள். போனில் ஏதோ மெசேஜ் அனுப்புகிறாள். அந்தப் பெண் போனைக் கைப்பைக்குள் போட்டதும் காத்திருந்தவனைப் போல் ஒருவன் அவளிடம் ஓடி வருகிறான். தயக்கத்துடன் ஏதோ ரகசியக் குரலில் பேசுகிறான். இருவரும் கிளம்புகிறார்கள். எல்லாம் ஓரிரு நிமிடங்களில் நடந்துa முடிந்தன. அவர்களின் முகம் பார்க்கும் அவகாசம்கூட இருக்கவில்லை தியாவுக்கு.

திடீரென்று தனக்கான ரேட் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எதை வைத்து முடிவு செய்யப்படும்? 35 வயது, ஐந்து வயது குழந்தைக்குத் தாய். இதெல்லாம் பார்த்துதான் ரேட் பேசுவார்களோ! தக்காளி கிலோ இரண்டு வெள்ளியில் இருந்து நான்கு வெள்ளிக்குள் என்பதுபோல் பொதுவான ஒரு ரேட் தெரிந்தால்தானே கூடுதல் குறைவு பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு. யார் ரேட் முடிவு செய்வார்கள்? தன்னைத் தொலைவில் இருந்து பார்க்கும் யாருக்கும் தானும் அந்தப் பெண்களில் ஒருத்தியாகத்தானே தெரிவாள்? எத்தனை பேர் தனக்கான ரேட்டை மனதிற்குள் மதிப்பிட்டிருப்பார்கள்? சிந்தனை எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க, போனை உள்ளே வைக்க கைப்பையைத் திறக்கிறாள். பக்கச் சிறு அறையில் இருந்த லிப்ஸ்டிக் கண்ணில் படுகிறது. அந்த அடர்நிற லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் பூசிவிட்டுக் கைப்பையை மூடுகிறாள். அக்கம்பக்கம் பார்த்தபடிக் காத்திருக்கத் தொடங்குகிறாள். போன் அடிக்கிறது. ரகுவாகத்தான் இருக்கும். வரட்டும், இந்தப் பக்கம்தானே வந்தாக வேண்டும். அதுவரைக்கும் காத்திருக்கலாமே. 


பதாகை – அக்டோபர் 2020

%d bloggers like this: