அவனைச் சுற்றிலும்
நென்னல் மணம்
அங்கு
அவனுக்கானோரும்
இன்றைத் துறந்து திரிகிறார்கள்
நேற்றைக் கை முழுதும்
நிறைத்து வைத்திருக்கிறான்
அதில்
நேற்றைய பூக்களும்
மலர்ந்தே இருக்கின்றன
பெளர்ணமிக்கு முந்தைய நாளின்
முழுமைக்கு மிக அருகிலான
நேற்றைய நிலா
மேகங்களை உரசிக்கொண்டிருக்கிறது
உதடுகளின் வழி உள்நுழைந்து
பாதம்வரை சென்று
பின் தலைக்கேறி
மீண்டும் உதடு தொட்டு
சுழற்சியில்
நேற்றின் பாடலொன்று
அவனுக்குள்
இசைத்தபடியிருக்கிறது
இன்றின் சிறுகீற்றைக் கிள்ளியெடுத்து
அவனிடம் நீட்டிப் பாருங்கள்
நாளை இது கிட்டாதெனவும்
சொல்லிப் பாருங்கள்
ஒரு பதட்டமும் இன்றி
நிரம்பி வழியும் கைகளைக் காட்டி
இங்கு இடமில்லை என்பான்
இன்றை நேற்றைக்கு வர
உத்தரவிடுவான்
கடந்தகாலத்தைக் கடக்க வேண்டும்
என்றோ
உன் கையில் இருப்பது இறந்தகாலம் என்றோ சொல்லிவிடாதீர்கள்
இன்றுடன் அவன்
வாதிட விரும்புவதில்லை
உங்களுக்குப் பதிலுரைக்க
வந்துகொண்டிருக்கிறது
காலம்
சிராங்கூன் டைம்ஸ் – மார்ச் 2022